Type Here to Get Search Results !

இன்று சர்வதேச யோகா தினம்:நாடு முழுவதும் 20 கோடி பேர் பங்கேற்பு

 
            ஐக்கிய நாடுகள் சபை அறிவிப்பின்படி, முதலாவது சர்வதேச யோகா தினம் உலகின் பெரும்பாலான நாடுகளில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, இந்தியாவில் யோகா தினத்தை, தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் சிறப்பாகக் கொண்டாட மத்திய "ஆயுஷ்' (ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்த, ஹோமியோபதி மருத்துவம்) துறை ஏற்பாடு செய்துள்ளது. மேலும், நாடு முழுவதிலும் நடைபெறும் யோகா தின நிகழ்ச்சிகளில் சுமார் 20 கோடி பேர் பங்கேற்கிறார்கள்.
            மோடியின் விருப்பம் ஏற்பு: பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு செப்டம்பரில் ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்திரக் கூட்டத்தில் பேசுகையில், "அனைவருக்கும் யோகா கலையை கற்பிக்கவும், அந்தக் கலை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் சர்வதேச யோகா தினத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்' என்று விருப்பம் தெரிவித்தார்.
       இதற்கு ஐ.நா.சபையில் அங்கம் வகிக்கும் 177 உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து, ஆண்டுதோறும் ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் ஐ.நா. சபையில் கடந்த ஆண்டு டிசம்பரில் நிறைவேற்றப்பட்டது.
      இதைத் தொடர்ந்து, யோகாவின் பிறப்பிடமாக மதிக்கப்படும் இந்தியா, சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படும் வகையில், வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் மூலம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்திலும் சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
     35 ஆயிரம் பேர் பங்கேற்பு: தலைநகர் தில்லியில் சர்வதேச யோகா தினத்தின் முக்கிய நிகழ்வு, குடியரசுத் தலைவர் மாளிகையையும், இந்தியா கேட்டையும் இணைக்கும் ராஜபாதை பகுதியில் நடைபெறவுள்ளது. இது குறித்து மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
         "தில்லியில் ராஜபாதையில் நடைபெறும் நிகழ்வின் மேடையில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலை வகித்து தொடக்கவுரை ஆற்றுவார். மேடையில் யோகா குரு பாபா ராம்தேவ் பல்வேறு ஆசனங்களை செய்முறையில் விளக்குவார். இந்நிகழ்வையொட்டி, ஞாயிறு காலை 6.40 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி ராஜபாதைக்கு வருவார். காலை 7 மணி முதல் 7.35 மணி வரை மொத்தம் 35 நிமிடங்களுக்கு இந்நிகழ்வு நடைபெறும். அப்போது நிமிடத்துக்கு ஓர் ஆசனம் என்ற வீதத்தில் மொத்தம் 35 ஆசனங்கள் இடம் பெறும்.
      தில்லி, தேசியத் தலைநகர் வலய பகுதிகளைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சுமார் 16 ஆயிரம் பேர், மத்திய அரசு ஊழியர்கள், 50 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டுத் தூதர்கள், அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், திரையுலகம், விளையாட்டுத் துறை பிரபலங்கள் உள்ளிட்ட சுமார் 37 ஆயிரம் பேர் வரை இந்நிகழ்வில் பங்கேற்பர்.
        2,000 டிஜிட்டல் திரைகள்: நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் 2,000 டிஜிட்டல் திரைகள் மூலம் மேடையில் பாபா ராம்தேவ் மேற்கொள்ளும் ஆசனங்களைப் பார்வையாளர்கள் பார்த்து ஆசனங்களைச் செய்ய முடியும். அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷன், தனியார் தொலைக்காட்சிகள் ஆகியவை நேரலையாக இந்நிகழ்வை ஒளிபரப்பு செய்யும்' என்றார் ஸ்ரீபாத் நாயக்.
     கேஜரிவால் பங்கேற்பு: தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்கப் போவதாகக் கூறியுள்ளனர். இந்நிகழ்வையொட்டி, இந்திய அஞ்சல் துறை சார்பில் சிறப்பு அஞ்சல்தலையும், மத்திய நிதி அமைச்சகம் சார்பில் ரூ.10, ரூ.100 சிறப்பு ரூபாய் நோட்டுகளும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இதைத் தொடர்ந்து, தில்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி யோகா தின சிறப்புரையாற்றுவார்.
     பலத்த பாதுகாப்பு: குடியரசு தின நிகழ்வுக்கு நிகரான ஏற்பாடு ராஜபாதையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் யோகா தின நிகழ்வுக்கும் செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, தில்லி காவல் துறையினர் சுமார் 10 ஆயிரம் பேர், மத்திய துணை ராணுவப் படையினர் உள்ளிட்டோர் நிகழ்வு நடைபெறும் ராஜபாதை, இந்தியா கேட், அதைச் சுற்றியுள்ள பகுதிகள் ஆகியவற்றில் சனிக்கிழமை முதல் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
    வான் வழிப் பாதுகாப்பு: ராஜபாதை நிகழ்வைச் சீர்குலைக்கும் நோக்குடன் சில சக்திகள் வான் வழியாகத் தாக்குதல் நடத்தக் கூடும் என்று மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைக் கவனத்தில் கொண்டு, ஞாயிறு காலை 6.30 முதல் காலை 8.30 மணி வரை இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் தீவிர வான் வழி கண்காணிப்புக்கு பாதுகாப்புத் துறை ஏற்பாடு செய்துள்ளது.
   தமிழகத்தில்... தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் (32) மத்திய ஆயுஷ் துறை மூலம் யோகா தினத்தையொட்டி, கடந்த மே 21 முதல் சனிக்கிழமை (ஜூன் 20) வரை இலவச யோகா பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டன.
   இது தொடர்பாக மேலும் விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக், "நாடு முழுவதும் மொத்தம் 646 மாவட்டங்களில் யோகா தினத்தைக் கடைப்பிடிக்கும் நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளன. இதில் சுமார் 20 கோடி பேர் பங்கேற்பர். ஒரு சமூக நோக்கத்துக்காக இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் பங்கேற்கும் நிகழ்வு உலகின் எந்தப் பகுதியிலும் இதுவரை நடைபெறவில்லை.
   அந்த வகையில், இந்தியாவில் கடைப்பிடிக்கப்படும் சர்வதேச யோகா தின நிகழ்வு, கின்னஸ் உலக சாதனை படைக்கும் வாய்ப்புள்ளது' என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.