Type Here to Get Search Results !

வைஷ்ணோ தேவி யாத்திரை தொடங்குகிறது : முதல் கட்டத்தில் 2000 பக்தர்களுக்கு அனுமதி



ஜம்மு காஷ்மீரில் வைஷ்ணோ தேவி புனித யாத்திரை மீண்டும் தொடங்குகிறது. தற்போது முதல் கட்டமாக 2000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசின் பாதிப்பு காரணமாக தொற்றை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாநிலங்களிலும் அதற்கேற்ப தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. ஜம்மு காஷ்மீரில் நோய் பாதிப்புகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகள் உள்ளிட்ட பல விஷயங்களிலும் அரசு கவனம் செலுத்துகிறது. இந்நிலையில், ஊரடங்கு தளர்வுகளால், ஏறக்குறைய 5 மாத இடைவெளிக்கு பின் மீண்டும் வைஷ்னோ தேவி யாத்திரை துவங்குகிறது. இந்து மதத்தின் புனித யாத்திரைகளில் ஒன்றான வைஷ்ணோ தேவி யாத்திரை கொரோனா பாதிப்புகளால் மார்ச்.,18 முதல் நிறுத்தப்பட்டது. தற்போது மறுபடியும் யாத்திரை இன்று காலை முதல் துவங்கியது.

யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்காக கோவில் நிர்வாகம் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தி வருகிறது. புனித யாத்திரையின் முதல் வாரத்தில், வாரியம் ஒரு நாளைக்கு 2,000 யாத்ரீகர்களின் உச்சவரம்பை நிர்ணயித்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்குள் இருந்து 1,900 பேர் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு வெளியே இருந்து 100 பேர் என அறிவித்துள்ளது. பின்பு நிலைமைகள் மறு ஆய்வு செய்யப்பட்டு ஒரு முடிவு எடுக்கப்படும். ஆன்லைன் முன்பதிவிற்கு பிறகு தான் யாத்ரீகர்கள் தங்கள் பயணத்தை தொடர அனுமதிக்கப்படுவார்கள். யாத்திரைக்கு செல்வதற்கு முன்பு, பயணத்தை மேற்கொள்ளும் பயணிகள் தங்கள் மொபைலில் ஆரோக்ய சேது ஆப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

யாத்ரீகர்கள் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகள் அவசியம் பின்பற்ற வேண்டும். 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், உடல்நலக்குறைவு உள்ளவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் சொந்த பாதுகாப்பிற்காக யாத்திரையைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிலைமை இயல்புநிலைக்கு வரும்போது, ​​இந்த குழுவிற்கான ஆலோசனை மறுபரிசீலனை செய்யப்படும். இது தொடர்பாக தலைமை நிர்வாக அதிகாரி கூறுகையில், யாத்திரை செல்ல குறிப்பிட்ட பாதை அறிவுறுத்தப்படுகிறது. கத்ராவில் இருந்து பவானுக்கு, பங்கங்கா, ஆத்குவாரி மற்றும் சஞ்சிச்சாட் வழியாக பாரம்பரிய பாதையை பயன்படுத்த வேண்டும். பவானில் இருந்து திரும்பிவர, ஹிம்கோட்டி - தாரகோட் பாதை பயன்படுத்தப்பட வேண்டும்.

ஜம்மு காஷ்மீரின் வெளியில் இருந்து வரும் பயணிகளின் கொரோனா சோதனை அறிக்கை, ஜம்மு காஷ்மீரின் சிவப்பு மண்டலங்கள் தரிசனி தியோடி, பங்கங்கா மற்றும் கத்ராவில் உள்ள ஹெலிபேட் மற்றும் யாத்திரை நுழைவு பகுதிகளில் சரிபார்க்கப்படுகின்றன. சோதனையில் தொற்று இல்லாதவர்கள் மட்டுமே பயணத்திற்கு அனுமதிக்கப்படுவர். யாத்திரை துவங்க அனுமதிக்கப்பட்டதால் வைஷ்ணோ தேவி கோவில் இருக்கும் திரிகுட்டா மலைகளின் அடிவாரத்தில் கடைகள் நடத்தும் வியாபாரிகள் கடைகளை மீண்டும் நடத்துவதற்கான பணிகளை மேற்கொள்கின்றனர். வைஷ்ணோ தேவி சன்னதி திறப்பதற்கான முடிவானது யாத்ரீக சுற்றுலாப் பயணிகளுடன் தொடர்புடைய பலருக்கு பெரும் நிம்மதி அளித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.