Type Here to Get Search Results !

ருத்ராக்ஷம்

        “ருத்ரனின் கண்” என்பது ருத்ராக்ஷத்தின் பொருளாகும்.

      
         பகவான் பரமேசுவரன் த்ரிபுராசுரர்களான தாராக்ஷன், கமலாக்ஷன் மற்றும் வித்யூக்மஸி என்பவர்களோடு யுத்தம் செய்கையில் தனது நெற்றிக் கண்ணைத் திறந்து அவர்களை எரித்து சாம்பலாக்கினர்.
      
         அச்சமயம் கருணையால் சிவனது கண்களிலிருந்து கண்ணீர் முத்துக்கள் கீழே விழ அவை விதைகளாக மாறி ருத்ராக்ஷ மரங்களாக வளர்ந்தன என்பது புராண வரலாறு.
      
         ப்ருஹத் ஜாபாலோபநிஷத் பரமேசுவரன் தனது ஸம்ஹார கார்யத்தைச் செய்யும் பபோது அவரது கண்களிலிருந்து ருத்ராக்ஷம் உண்டானதாக கூறுகிறது.
      
         சூரிய வடிவாகிய வலக்கண்ணிலிருந்து விழுந்த கண்ணீரில் பன்னிரண்டு ருத்ராக்ஷ மரங்களும், சந்த்ர ரூபமாகிய இடக்கண்ணிலிருந்து விழுந்த கண்ணீரில் பதினாறு ருத்ராக்ஷ மரங்களும், அக்னி வடிவாகிய நெற்றிக் கண்ணிலிருந்து விழுந்த கண்ணீரில் பத்து ருத்ராக்ஷ மரங்களும் தோன்றின.
       
         இடக்கண் நீரில் தோன்றிய ருத்ராக்ஷம் வெண்ணிறமாகவும், வலக்கண்ணிலிருந்து தோன்றிய ருத்ராக்ஷம் பழுப்பு நிறமாகவும், நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய ருத்ராக்ஷம் கறுப்பு நிறமாகவும் உள்ளது.

மருத்துவ பலன்கள்
        
          நல்ல ருத்ராக்ஷத்தை உரைத்துப் பார்த்தால் பசும் பொன்னின் நிறம் இருப்தைக் காணலாம். இதனை உரைத்து மருந்தோடு கலந்து குடித்தால் பல நன்மைகள் உண்டாகின்றன என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
        
          ரத்த அழுத்தம், மஞ்சள் காமாலை மற்றும் புற்றுநோய் போன்ற கொடிய வியாதிகளிலிருந்து நிவாரணம் அளிக்கக்கூடிய அபரிதமான சக்தியிருப்பதால் ருத்ராக்ஷமாலையைக் கழுத்தில் அணிவது நலன் என்று விஞ்ஞான ரீதியாகவும் கண்டுபிடித்துள்ளனர்.
        
          இதனால் சிலர் எப்போதுமே ருத்ராக்ஷ மாலையை மார்பில் அணிந்து வருகிறார்கள். மருத்துவ விளைவுகள் மற்றும் ஆன்மீக பிளைவுகளைக் கருதி காலவர்த்தமானத்திற்கேற்ப ஆண்களும், பெண்களும் ருத்ராக்ஷம் அணிந்து கொள்ளலாம்.
        
          ருத்ராக்ஷ ஜாபாலோபநிஷத் ருத்ராக்ஷத்தின் தோற்றம், வகை, நிறம், தரிகன பலன், உச்சாரண பலன் ஸ்பர்ச் பலன், தாரண பலன், ருத்ராக்ஷ முகங்களின் வகை அவற்றின் உயர்வு, பாவ நிவாரணம் முதலியவற்றை எடுத்து உரைக்கின்றது.

ருத்ராக்ஷ முகங்கள்
        
          சிவச் சின்னங்களில் ஒன்று ருத்ராக்ஷம். சிவபக்தர்கள் மஹா புனிதமாகக் கருதுவது ருத்ராக்ஷம்.
        
          ருத்ராக்ஷத்தில் இயற்கையாகவே துளை அமைந்து இருக்கிறது. ருத்ராக்ஷத்தில் ஒரு முகம் கொண்ட ருத்ராக்ஷம் முதல் பதினாறு முகம் கொண்ட ருத்ராக்ஷம் வரை பல வகைகள் உள்ளன.
        
          ருத்ராக்ஷத்தைப் பார்த்தால் அதன் மேல் கோடுகள் இருப்பதும், அ-து இரண்டாகவோ, மூன்றாகவோ அல்லது பல பிரிவுகளாகவோ காணப்படுவதும் தெரியும். அதையே முகமென்று சொல்கிறோம்.
        
              ‘ஏக்வக்த்ர சிவ சாக்ஷாத்’ என்று சொல்லப்பட்டுள்ளது.

·         ஒரு முகமுள்ள ருத்ராக்ஷம், ஸாக்ஷாத் சிவபெருமானே ஆகும். அதை அணிபவர் எல்லா பாவங்களிலிருந்தும் விடுபட்டு சிவலோகம் அடைவர்.

·         இரண்டு முகமுள்ள ருத்ராக்ஷம், கௌரி சங்கர் என்று சிறப்பித்துக் கூறப்படும் வகையில் அர்த்தாநாதீஸ்வர ஸ்வரூபமாக காணப்படுகிறது. அதை அணிந்தால், கோஹத்யா முதலிய பாவங்கள் அகலும்.

·         மூன்று முகமுள்ள ருத்ராக்ஷம், அக்னி ஸ்வரூபமாகவும், எல்லா வியாதிகளையும் நாசம் செய்யும் சக்தி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதை அணிபவர் எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி அடைவர்.

·         நான்கு முகமுள்ள ருத்ராக்ஷம், ப்ரஹ்ம ஸ்வரூபமாகவும், அணிபவர்க்கு அளவற்ற ஆற்றலை வழங்குவதாகவும் கூறப்பட்டுள்ளது. இது தர்ம, அர்த்த, காம, மோக்ஷ என்ற நான்கு புருஷார்த்தங்களையும் அளிக்கிறது.

·         ஐந்து முகமுள்ள ருத்ராக்ஷம், ஸ்த்யோஜாதம், வாம தேவம், அகோரம், தத்புருஷம், ஈசானம் என்ற பரமேசுவரனுடைய பஞ்ச முகங்களின்  உருவாய் அமைந்தது. இது அணிபவரின் பஞ்ச மஹா பாவங்களை விலக்கி அருளை கொடுக்கிறது.

·         ஆறு முகமுள்ள ருத்ராக்ஷம், ஷண்முக ருத்ராக்ஷம், சுப்ரமணியனின் அம்சமாய் அமைந்து கர்ப்ப ஹத்யாதி தேஷங்களை நிவாரணம் செய்கிறது.

·         ஏழு முகமுள்ள ருத்ராக்ஷம், அனந்த ஸ்வரூபம், அதாவது அனந்த கார்க்கேடாக,புண்ட்ரீக, கரேஷ, தக்ஷக, விசோல்ப, சங்கசூட என்ற ஏழுவகை நாகங்களிடமிருந்தும் பயத்தைப் போக்கி எத்தகைய விஷத்தையும் நீக்க வல்லது.

·         எட்டு முகமுள்ள ருத்ராக்ஷம், விநாயக ஸ்வரூபம், அஷ்டவஸுக்களின் தத்துவம், செல்லும் இடமெல்லாம் வெற்றியைத் தரும்.

·         ஒன்பது முகமுள்ள ருத்ராக்ஷம், பைரவி ஸ்வரூபம், நவசக்திகளின் அம்சமாய் கபில ருத்ராக்ஷம் எனப் பெயர் பெற்று அணிபவர்க்கு சக்தியையும், மதிப்பையும் பெற்றுத் தரும்.

·         பத்து முகமுள்ள ருத்ராக்ஷம், சிவபுராணம் சாக்ஷாத் விஷ்ணு ஸ்வரூபம் என்று வர்ணிக்கிறது. பூத, ப்ரேத, பிசாசு உபத்திரவங்களிலிருந்து காப்பாற்றி மனசாந்தியை அளிக்க வல்லது.

·         பதினோரு முகமுள்ள ருத்ராக்ஷம், ஏகதாச ருத்ரர்களான மஹா ருத்ர ஸ்வரூபம், அதை சிரஸிலே அணிந்து கொள்வது சிறந்தது. அணிபவர்க்கு அனைத்து ஐஸ்வர்யங்களையும் அளிக்கும். பிறவித் தளையிலிருந்து விடுவிக்கும். இந்த ருத்ராக்ஷம் சிவ ஸாயுஜ்யத்தை அளிக்க வல்லது. மஹாயக்ஞ பலன் கிடைக்கிறது.

·         பன்னிரண்டு முகமுள்ள ருத்ராக்ஷம், அர்க ஸ்வரூபமாய் பன்னிரண்டு ஆதித்யர்களுக்கு மகிழ்ச்சியளிப்பது. சகல புண்ய தீர்த்த ஞான பலனை அளிக்க வல்லது. இதை அணிபவரை ஒருபோதும் வறுமை அண்டாது.

·         பதின்மூன்று முகமுள்ள ருத்ராக்ஷம், ஸர்வ ஆசைகளையும் பூர்த்தி செய்து வைக்கும் காம ஸ்வரூபமாய் விச்வே தேவர்களுக்கும் பிரியமானது.

·         பதினான்கு முகமுள்ள ருத்ராக்ஷம், ஸ்ரீகாந்த ஸ்வரூபம் என்ற பெயர் பெற்று அணிபவரைத் தேவர்களாலும் வணங்கப் பெறும் பெருமையடையச் செய்கிறது. இதை அணிபவர் தானே சில ஸ்வரூபத்தை அடைகிறார் என்று நூல்கள் கூறுகின்றன.

·         பதினைந்து முகமுள்ள ருத்ராக்ஷம், சகல பாவங்களையும் நீக்கும். இந்திரன், பிரம்மா, விஷ்ணு, லோக இன்பங்களை அளிக்கும்.

·         பதினாறு முகமுள்ள ருத்ராக்ஷம், சிவ சாயுஜ்ய பதவியை அளிக்கும். பதினான்கு, பதினைந்து, பதினாறு முக ருத்ராக்ஷங்கள் கிடைப்பது அருமையிலும் அருமை.
        
           ருத்ராக்ஷங்களில் உருவில் சிறியதும், பெரியதுமாக மூன்று வகை உண்டு. அரிநெல்லிக்கனி அளவு உள்ள சிறிய ருத்ராக்ஷம் அதிகப்பலன் அளிப்பது ஆகும்.

நூல்களில்……………
       
        “ருத்ராக்ஷ ஜாபாலோநிஷத்” ருத்ராக்ஷம் “மும்மூர்த்திகளின் வடிவம்” என்று கூறுகிறது.
       
      ருத்ராக்ஷத்தின் மஹிமையை சிவபுராணம், பத்மபுராணம், சிவகீதை, லிங்கபுராணம் போன்ற புராணங்களில் மிக விரிவாகக் காணலாம்.
        
       ருத்ராக்ஷ ஜாபாலோபநிஷத்தில் பரம சிவனே ருத்ராக்ஷத்தின் பெருமையை ஸ்கந்தனுக்கு அருளுவதாகக் கூறப்பட்டுள்ளது.

கிடைக்கும் இடங்கள்
       
          சிவ புராணத்தில் வித்யேசுவர ஸம்ஹிதையில் ருத்ராக்ஷம் கிடைக்கும் இடங்கள் பற்றிய விவரம் சொல்லப்பட்டிருக்கிறது.
           கௌட தேசம்லி அதாவது தற்போதைய வங்காளத்தின் வடபகுதி, வடமதுரா, அயோத்தியை அண்டிய பகுதிகள், ஸஹயாத்ரி மலைத் தொடர், மைசூரின் தெற்கிலிருந்து திருவனந்தபுரம் வரை செல்லும் மேற்குத் தொடர்ச்சி மலையின் தென்பகுதிகள், மலேசியா நாட்டின் வடக்கில் சில பகுதிகள், இலங்கையில் ஒரு சில குறிப்பிட்ட இடங்கள் மற்றும் நேபாளத்திலும் கிடைக்கிறது. ஜாவாத்தீவிலும் ருத்ராக்ஷ மரங்கள் உண்டு.

தாரண நியமம்
    
         உடலின் தலையில், காதுகளில், மார்பில், புயங்களில், கைகளில் ருத்ராக்ஷம் அணியலாம். குளிக்கும் போது ருத்ராக்ஷம் அணிவது நலம் பயக்கும், ஏனென்றால், ருத்ராக்ஷ மணிகள் மீது பட்டு வடியும் நீர்  கங்கை நீருக்குச் சமமாகும்.
         
          ஏகமுக ருத்ராக்ஷத்தை கழுத்தின் மேல் பகுதியில் இருக்குமாறு அணிந்து கொண்டு ஸ்நானம் செய்தால் ஸஹஸ்ர ஸங்காபிஷேகம் செய்த புண்ணியம் கிட்டும்.
        
         சிவமந்திர ஜபம், ஸந்த்யா வந்தனம், சிவ பூஜை, சிவ தியானம், சிவாலய தரிசன்ம், தீர்த்த மாடல், விரதம் அனுஷ்டித்தல், ச்ரார்த்தம் செய்தல் ஆகிய காலங்களில் அவசியம் ரத்ராக்ஷம் தரித்துக் கொள்ள வேண்டும்.
         
          படுக்கும் போது, மலம் நுலம் கழிக்கும் போது, ஜனை தீட்டு, மரண தீட்டு ஆகிய காலங்களில் தரிக்கக் கூடாது.
         
           புலால் உண்ணும் பழக்கம் உடையவர், மதுபானம் உடையவர், மதுபானம் செய்வோர், புகை பிடிப்போர், பிறமாதர் தொடர்புடையோர் ஆகியோர் ருத்ராக்ஷம் தரித்துக் கொண்டு இப்பாவங்களைச் செய்தால் தவறாது நரகம் அடைவர்.
         
         ருத்ராக்ஷ மாலையை அணிந்தோ, அதை ஜபமாலையாக பயன்படுத்தியோ ஜபம் செய்தால் அளவிட முடியாத பலன்கள் கிடைக்கும்.

அணிவதன் பலன்

         ருத்ராக்ஷத்தை அணிந்து கொள்வதற்கு எந்த சைவன் கூசுகிறானோ, அவனைக் காண்பதற்கு சிவனும் கூசுகிறான்.
          
         பூண்பதற்க்குக் கண்டியினை கூசியிடும் புல்லியரை
           காண்பதற்க்குக் கூசும் அரன் கைத்து
       
          ருத்ராக்ஷம் அணிபவரை எவ்வித உபாதிகளும் வந்தடையமாட்டா.
      
         இலங்குமாமணி உருத்திர அக்கம் ஒன்றணியில்
        விலங்கெயிற்று வெம்பூதங்கள் முதலியவமேவா
     
        மான் தோல் மீது உட்கார்ந்து கொண்டு ருத்ராக்ஷ மாலை கொண்டு ஜபம் செய்தால் ஞானம் உண்டாகும்.
     
        ஒரு லட்சம் ருத்ராக்ஷத்தைக் காண்பதும், ஒரு கோடி ருத்ராக்ஷங்களைத் கையால் தொடுவதும் மஹா புனிதமானவை.
     
        ஒரு அறிவிலி கூட ஒரு ருத்ராக்ஷத்தை அணிவதால் மேன்மை அடைகிறான்.
      
        ருத்ராக்ஷத்தை அணிந்து சாதனையில் ஈடுபடுபவன் அனைத்துப் பாவங்களிலிருந்தும் விடுபட்டு சிவனருளுக்குப் பாத்திரமாகிறான்.
       
        கம்பளத்தின் மீது உட்கார்ந்து ஜபம் செய்தால் முக்தி உண்டாகும்.
        
        சிவன் கோயில்களில் கருவறையில் சிவலிங்கத் திருமேனிக்கு மேல் உச்சியில் கட்டியிருப்பது ருத்ராக்ஷ விதானமாகும். பெரும்பாலான கோயில்களில் பட்டாடையால் இது அமையப் பெற்றிருக்கும்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.