Type Here to Get Search Results !

சித்திரை நவமி... ராமர் அவதாரம்... பக்தர்கள் கொண்டாட்டம்... ராம நவமி விரதம்.. என்ன செய்யவேண்டும்

  


சித்திரை மாதத்தில் வளர்பிறை நவமியன்று ராமர் அவதரித்தார். சில ஆண்டுகளில் இந்த விழா, பங்குனி மாதத்திலும் வரும். இந்த ஆண்டு சித்திரை 08ஆம் தேதி ஏப்ரல் 21ஆம் நாள் புதன்கிழமை அன்று ராம நவமி கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீராம நவமி நாளில் காலையில் உணவு ஏதும் சாப்பிடாமல் ஸ்ரீராம நாமம் துதித்து விரதமிருந்து ஸ்ரீராமபிரானை வணங்கி வழிபடுபவர்களின் குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேருவர், குடும்ப நலம் பெருகி, வறுமை நீங்கி செல்வம் பெருகும்.நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

அஷ்டமி, நவமி தினங்களில் எந்த காரியத்தையும் செய்ய மாட்டார்கள். அந்த இரு திதிகளையும் புறக்கணித்து விடுவார்கள்.

இதனால் கவலையுற்ற அஷ்டமி, நவமி ஆகிய இரு திதிகளும், மகா விஷ்ணுவிடம் சென்று தங்களுக்கு ஏற்பட்டுள்ள குறையை கூறினர். அப்போது விஷ்ணு பகவான், உங்களையும் மக்கள் அனைவரும் போற்றி துதிக்கும் நாள் வரும் என்று உறுதியளித்தார். அதன்படியே வாசுதேவர்-தேவகி ஆகியோருக்கு மகனாக, அஷ்டமி திதியில் கிருஷ்ணர் தோன்றினார். அன்றைய தினம் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. நவமி திதியில் தசரதர்-கோசலை தம்பதியருக்கு மகனாக அவதரித்தார் ராமபிரான். அன்றைய தினம் ராம நவமி திருநாளாக கொண்டாடப்படுகிறது.

ராமர் அவதாரம்

ராமபிரான் அவதரித்த நாளே ராமநவமி என்று கொண்டாடப்படுகிறது. ராமர் பிறப்பதற்கு முன் ஒன்பது நாட்கள் ஒரு விரத முறையாகவும், ராமர், பிறந்ததில் இருந்து ஒன்பது நாட்கள் ஒரு விரத முறையாகவும் அனுஷ்டிக்கப்பட்டு, ராமநவமியை பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பக்தர்கள் கொண்டாட்டம்

ராமநவமி விரதம் இரண்டு விதமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அதாவது, சித்திரை மாதம் சுக்லபட்ச பிரதமை திதியில் இருந்து நவமி திதி வரை உள்ள ஒன்பது நாள் விரதம் முதல் வகையாகும். இதற்கு 'கர்ப்போஸ்தவம்' என்று பெயர். சித்திரை மாத சுக்லபட்ச நவமி திதியில் இருந்து அடுத்து வரும் ஒன்பது நாட்கள் அனுஷ்டிப்பது இரண்டாவது வகை. இதற்கு 'ஜன்மோதீஸவம்' என்று பெயர்.

ராம நவமி விரதம்

இந்த ஆண்டு ஸ்ரீராம நவமி புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. நவமி திதி ஏப்ரல் 21ஆம் தேதி நள்ளிரவு 12.35 மணிக்கு தொடங்குகிறது. ஏப்ரல் 22ஆம் தேதி பின்னிரவு 12.35 மணிவரைக்கும் உள்ளது. நாளை பிற்பகல் 10.19 மணி முதல் 12.52 மணிவரை ஸ்ரீராமபிரானுக்கு சர்க்கரைப் பொங்கல் படையல் செய்து வழிபடலாம்.

குடும்ப ஒற்றுமை கூடும்

ராம நவமி நாளில் விரதமிருந்து மனமுருகி இறைவனை வேண்டிக் கொண்டால் குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்கள் ஒன்று சேருவர், குடும்ப நலம் பெருகி, வறுமையும், பிணியும் அகலும், நாடியப் பொருட்கள் கைகூடும் என்ற ஐதீகம் உண்டு. நாளை ராம நவமியன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, வீட்டை தூய்மைப்படுத்தி விரதத்தை கடைபிடிக்க வேண்டும். காலை நேரத்தில் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும்.

நீர் மோர் பானகம்

பூஜை அறையில் ராமர் படத்தை நன்றாக சுத்தம் செய்து குங்குமம், சந்தனம் போன்றவற்றால் பொட்டு வைத்து, துளசிமாலை அணிவிக்க வேண்டும். பின் பழம், வெற்றிலை, பூ இவைகளை வைத்து ஸ்ரீராம நாமத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். சாதம், பாயாசம், பானகம், வடை, நீர்மோர், தேங்காய், பஞ்சாமிர்தம், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு இவற்றை நைவேத்தியமாக படைக்கலாம்.

ஸ்ரீ ராம நாமம்

ராமரை பற்றிய நூல்களை படித்தும், பாராயணம் செய்வதுமாக இருக்க வேண்டும். ஸ்ரீராம நவமி நாளில் ராம நாமம் ஜெபிப்பதும், ராம நாமத்தை பிறர் சொல்லக்கேட்பதும், ராமபிரானுடைய திருநாமத்தை எழுவதும் மிகுந்த புண்ணியத்தைக் கொடுக்கும், ராமாயணம் படிக்க இயலாதவர்கள், ராம.... ராம என்று உச்சரித்தாலே புண்ணியம் கிடைக்கும்.

சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம்

ராம நவமி நாளில் ஸ்ரீராமர் கோவில்களில் பட்டாபிஷேகம் நடைபெறும். இன்றைய கால கட்டத்தில் கோவில்களுக்கு செல்ல முடியாது என்பதால் வீட்டிலேயே ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் படத்தை வைத்து வழிபடலாம். அர்ச்சனை முடிந்தபின் நைவேத்தியமான சர்க்கரை பொங்கலை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.