Type Here to Get Search Results !

தஞ்சை பெரியகோவில் கருவறையில் ஓவியங்கள்: விரைவில் மக்களின் பார்வைக்காக ஏற்பாடு



தஞ்சை பெரிய கோவிலின் கருவறையில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஓவியங்களை பார்வையிட தொல்லியல்துறையினர் ஏற்பாடுகள் செய்வதாக தெரிவித்துள்ளனர். தஞ்சை பெரியகோவிலில் பழமையான ஓவியங்கள் இருக்கிறது. அப்படியாக முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்ட விமானத்தின் கருவறையை சுற்றி குறுகிய பாதையில் உள்ள சுவர்களி்ல், சுண்ணாம்புக் கலவையைப் பூசி, அக்கலவை ஈர நிலையில் இருக்கும் போது தீட்டிய ஓவியங்கள் உள்ளன.

இவை சுதை ஓவிய முறையில் நேர்த்தியாகவும் நீண்ட நாட்கள் இருக்கக் கூடிய வகையிலும், தீட்டப்பட்டது. இந்த சுதை ஓவியங்கள் அமைக்கும் கலை, தமிழகத்தின் வரலாற்று தொடக்க காலத்தில் இருந்து வருகிறது என கூறப்படுகிறது. இது தொடர்பாக, 1930ம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் கோவிந்தசாமி என்பவர் ஆய்வுக்காக வந்த போது, கருவறை திருச்சுற்றுப்பாதை சுவர்களில், இருந்த நாயக்கர் கால ஓவியங்களும், அதற்கு முற்பட்ட ஓவியங்களும் பலவகையான வண்ணங்களுகடன் இருப்பதை பார்த்தார். மீண்டும், 1931ம் ஆண்டு ஏப்ரல் 29ல், மிகக் குறுகலான பாதையில் வெளிச்சம் மட்டும் இருந்த கருவறையின், சுற்றுப்பாதையில் மேற்கு சுவர் பகுதிகளை விரிவாக ஆய்வு செய்த போது, நாயக்கர் கால ஓவியங்களுடன், சோழர் கால ஓவியங்களும் மறைந்துள்ளதை கண்டுபிடித்தார். இங்குள்ள ஓவியங்கள் 15 சுவர் பகுதிகளில் தீட்டப்பட்டிருந்தன. இவ்வோவிய தொகுதிகள் ஒவ்வொன்றும் 3 மீட்டர் நீளமும், 4.5 மீட்டர் உயரமும் கொண்டதாக உள்ளது. இதில் 5, 7, 9, 11 ம் சுவர் பகுதிகளில் சோழர் கால ஓவியங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இங்கு சிவ பெருமான் தொடர்பான ஓவியங்கள் மட்டுமன்றி நாயன்மார்களின் வாழ்க்கைச் சம்பவங்கள் விளக்கமாக காணப்படுகின்றது.
 
அப்படியாக இருந்த ஓவியங்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட அரச குடும்பத்தினர், அரசர்கள், புலவர்கள், பொதுமக்கள், நடை, உடை, அணிகலன்கள், வழிபாடு, வாழ்க்கை முறை போன்றவற்றை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது. இதில், சோழர் கால ஓவியங்கள் பல அழிந்த நிலையில் தற்போது காணப்படுகிறது. இந்த ஓவியங்களை் பார்வையிட அனுமதி பெற வேண்டும் என்கிற நிலையில், பொதுமக்களுக்கு ஓவியங்கள் குறித்து தெரியாமல் இருந்து வருகிறது. இதற்காக ஓவியங்களை அனைவரும் பார்வையிட அனுமதியளிக்க வேண்டும் என, சமூக ஆர்வலரும், "ராஜராஜம்" நுாலின் ஆசிரியருமான ஜீவக்குமார், மத்திய தொல்லியல் துறையினருக்கு தகவல் அறியும் சட்டத்தில் கேள்வி எழுப்பி கடிதம் அனுப்பியிருந்தார். அதற்கு, தொல்லியல் துறையின் உதவி பராமரிப்பு அலுவலர், கடந்த 21ம் தேதி அனுப்பிய பதில் கடிதத்தில்,  இந்த ஓவியங்கள் பாதுகாக்கப்பட்டவை. பாதுகாப்பு கருதி அதனை யாரும் நேரில் பார்வையிட முடியாது. அதற்கு பதிலாக அந்த ஓவியங்களின் போட்டோக்களை, கோவிலின் தென்புறத்தில் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என பதில் தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.