Type Here to Get Search Results !

பத்மநாபா ஏகாதசி விரதம்; தேவசயனி ஏகாதசி விரத மகிமைகள்... கடைப்பிடிக்கும் வழிமுறைகள்!

Ekadasi is a boom || ஏற்றம் தரும் ஏகாதசி



சதுர்மாஸ்ய காலத்தில் வருகின்ற ஏகாதசியை சயனி ஏகாதசி என்கின்றனர். இந்த ஏகாதசி நாளில் தீப தானம் செய்வது சிறப்பாகும். 



ஏகாதசிக்கு மிஞ்சிய விரதம் இல்லை என்பது ஆன்றோர் வாக்கு. ஒவ்வொரு ஏகாதசியும் தனித்துவம் வாய்ந்தது. சதுர்மாஸ்ய காலத்தில் வருகின்ற ஏகாதசியை சயனி ஏகாதசி என்கின்றனர். இந்த ஏகாதசி நாளில் தீப தானம் செய்வது சிறப்பாகும். ஆஷாட மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசிக்கு தேவசயனி ஏகாதசி என்று பெயர். சயனம் என்றால் உறங்குதல் திருமால் ஆடி பௌர்ணமியிலிருந்து கார்த்திகை பௌர்ணமி வரை உறங்குகிறார். அதனால் இக்காலத்தில் வருகின்ற ஏகாதசியை சயனி ஏகாதசி என்கின்றனர். 



இந்த நாள்களில் சன்னியாசிகள் ஒரே இடத்தில் தங்குகிறார்கள். இந்த நாளைப் பற்றி கார்த்திகை மகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது. பித்தளை, வெங்கலம், வெள்ளி ஆகிய தனிமங்களில் ஏதேனும் ஒன்றில் செய்யப்பட்ட விளக்கினை எடுத்து தட்டின் நடுவே வைக்க வேண்டும். அந்த விளக்கினை நெய்யால் நிரப்பி திரியிட்டு ஏற்ற வேண்டும். வேதம் கற்றவர்களுக்கு அதனை தானமாக தந்தால் ஞானமும், செல்வமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.





இந்த நாளில் யோக நித்திரையில் ஆளும் மகாவிஷ்ணு பின்பு கார்த்திகை மாதத்தில்வரும் பிரபோதினி ஏகாதசி அன்றுதான் கண்விழிப்பதாக ஐதிகம். இதைத் தொடர்ந்துவரும் பௌர்ணமியிலிருந்து சாதுர்மாஸ்ய விரதம் தொடங்குகிறது. தேவசயனி ஏகாதசிக்குப் பின்வரும் பௌர்ணமியிலிருந்து நான்கு மாத காலம் மேற்கொள்ளப்படும். இந்தக் காலம் மிகவும் புனிதமான காலமாகப் போற்றப்படுகிறது.



இந்தக் காலகட்டத்தில் சூரியன் தன் உத்திராயண சஞ்சாரத்திலிருந்து விலகி தட்சிணாயின சஞ்சாரத்தில் பிரவேசிப்பார்.



பொதுவாக ஏகாதசி விரதம் என்பது மூன்று நாள்கள் கொண்டது. ஏகாதசிக்கு முன் தினம் அதாவது தசமி திதி அன்று இரவு உணவைத் தவிர்க்க வேண்டும். மறுநாள் காலையில் நீராடி பெருமாளை வணங்கி விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் அல்லது நாராயண மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும். ஏகாதசி அன்று முழு உபவாசம் இருப்பது நல்லது. இயலாதவர்கள் முழு அரிசி சோற்றைத் தவிர்க்க வேண்டும். ஏகாதசி அன்று துளசி தீர்த்தம் அருந்த வேண்டும். அதற்கான துளசியை தசமி அன்றே பறித்துவைத்துக்கொள்ள வேண்டும். மறுநாள் துவாதசி காலையில் பாரனை செய்து விரதம் முடிக்க வேண்டும்.



அமாவாசை நாளையும், பௌர்ணமி நாளையும் அடுத்து வரும் பதினோராவது திதி ஏகாதசி ஆகும். 15 நாட்களைக் கொண்ட தொகுதியில் பதினோராவது நாளாக வருவதால் இந்த நாள் ஏகாதசி என்ற பெயரால் அழைக்கப்பட்டது. இதில் தேவசயனி ஏகாதசி ஜெகன்னாதர் ரத யாத்திரைக்குப் பிறகு வரும், இந்த தேவசயனி ஏகாதசி விஷ்ணு பகவானுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.



இந்து ஐதீகத்தின் படி இந்த தேவசயனி ஏகாதசியில் விஷ்ணு பகவான் உறங்குவார் என்றும் நான்கு மாதங்கள் கழித்து தனது உறக்கத்திலிருந்து எழுவார் என்று நம்பப்படுகிறது.



இந்த ஆண்டு, தேவசயனி ஏகாதசி 2020 ஜூலை 01, புதன்கிழமை அனுசரிக்கப்படும். தேவசயனி ஏகாதசி நேரங்கள் கீழே உள்ளன:



தேவசயனி ஏகாதசி திதி - ஜூன் 30, 2020 அன்று மாலை 07:49 தொடங்குகிறது 



தேவசயனி ஏகாதசி திதி - ஜூலை 01, 2020 அன்று மாலை 05:29 முடிவடைகிறது 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.