Type Here to Get Search Results !

மகாஷியை வதம் செய்த சபரிமலை ஐயப்பன்

ண்டசராசரங்களையும் காக்கும் ஆதிபராசக்தி, தனது மக்களை வாட்டிவதைத்த அசுரன் மகிஷனையும் அவனுக்குத் துணை நின்ற அசுரர்களையும் நவராத்திரி நாள்களில் போரிட்டு வதம் செய்தாள். தேவர்களின் சூழ்ச்சியால்தான் தனது அன்புக்கு உரிய அண்ணன் மகிஷன் மாண்டான் என்று அவன் தங்கை மகிஷி அனலாகக் கொதித்தாள்.
தேவர்களையும் மூவர்களையும் சுட்டுப் பொசுக்கிவிடத் துடித்தாள். தேவர்கள் கூடி சதி செய்து அசுரர்கள் மாண்டு போவது என்பது காலம் காலமாக நடந்து வரும் வேதனை. இதனைத் தான் எப்படியேனும் தடுத்து தேவர்கள் கூட்டத்தினையே ஒழித்து விட வேண்டும் என்று கோபத்தில் வெடித்தாள் ...
           தான் எண்ணியது உடனே நடந்து விடுமா என்ன? அதற்குத் தேவையான பலத்தைப் பெற வேண்டாமா? எவராலும் வெல்லமுடியாத ஆற்றலை வரமாகப் பெற கானகம் நோக்கிப் புறப்பட்டாள். பிரம்மதேவரின் அருள் வேண்டி கடும் தவம் மேற்கொண்டாள்.
            நீண்டகாலம் தொடர்ந்த மகிஷியின் தவ வெம்மையைப் பொறுக்க முடியாத தேவர்கள் தவித்தனர். அவளின் தவத்தை முடிவுக்குக் கொண்டு வரவேண்டிய நிர்ப்பந்தம் பிரம்மதேவருக்கு ஏற்பட்டது. மகிஷிக்கு காட்சி தந்தார் பிரம்மதேவர். வேண்டும் வரம் கேட்கும்படியும் கூறினார். எப்போதும்போல் தனக்கு யாராலும் மரணம் நேரக்கூடாது என்று வரம் கேட்டாள். அது இயலாத காரியம் என்று பிரம்மதேவர் மறுத்துவிடவே, ஈசனுக்கும் திருமாலுக்கும் பிறக்கும் மகனால் மட்டுமே தனக்கு மரணம் நேரவேண்டும் என்று வரம் பெற்றாள்.
          முடியவே முடியாத விநோத வரத்தால் தனக்கு அழிவே இல்லை என்று எண்ணி எல்லோர்மீதும் கொடுமைகளைக் கட்டவிழ்த்தாள் மகிஷி. எருமைத்தலையும், வக்கிரபுத்தியும் கொண்ட மகிஷி அடக்கமுடியாத தீய சக்தியாக உருவெடுத்தாள். இவளின் அல்லல் தாங்காத தேவர்களும் ரிஷிகளும் சர்வேஸ்வரனை தஞ்சம் புகுந்தார்கள். தீனதயாளனான பரமேஸ்வரன் திருவருள் செய்தார். அதன்படி மோஹினி ரூபமான திருமால், ஈசன் அம்சத்தில் ஹரிஹரசுதன் ஐயப்பன் பிறந்தார்.
                மண்ணுலகில் வாழும் மகிஷியை வெல்ல, மண்ணுலகிலேயே ஐயப்பன் விடப்பட்டார். பரசுராமரால் உருவாக்கப்பட்ட பரசுராம க்ஷேத்திரத்தில் பம்பா நதிக்கரையருகே மலர்களுக்கிடையே கிடந்தார் குழந்தை ஐயப்பன். காண்பதற்கரிய கருணாமூர்த்தியை அந்த வழியே வேட்டைக்கு வந்த பந்தள அரசன் ராஜசேகரன் மகிழ்ந்து ஏற்றான். பிள்ளையில்லாத தனக்கு மகேசன் அளித்த கொடையென்று மகிழ்ந்தான். கழுத்தில் ஒளிவீசும் மணியோடு இருந்ததால் 'மணிகண்டன்' என்ற பெயரால் ஐயப்பன் வளர்க்கப்பட்டார்.
            ஈஸ்வரபுத்திரன் வந்த நேரம் பந்தள அரசனுக்கு யோகத்துக்கு மேல் யோகம் கூடியது. செல்வம் பெருகியது, பகைகள் விலகியது. அதுமட்டுமா? பிள்ளையில்லாது இருந்த அரசியும் கருவுற்றாள். பிறந்த குழந்தைக்கு ராஜராஜன் என்ற பெயர் சூட்டப்பட்டது. தனக்கு என்று ஒரு பிள்ளை வந்ததும் அரசி மனம் மாறினாள். அதுவும் மணிகண்ட மூர்த்திக்கு பட்டாபிஷேகம் செய்யப்பட இருக்கிறது என்ற செய்தி கேட்டதும் துடித்தாள். மணிகண்டனை எப்படியும் அழித்துவிடத் துடித்தாள்.
          மந்திரியோடு சேர்ந்து, தனது நோய் தீர பாலகன் மணிகண்டனை புலிப்பால் கொண்டு வரப் பணித்தாள். அண்டசராசரங்களையும் ஆட்டுவிக்கும் நாயகனான ஐயப்பன், புலிக்கூட்டத்தையே மயங்கச் செய்து புலிப்பால் கொண்டு வந்தான். புலிவாகனன் என்ற சிறப்புப் பெயரையும் கொண்டான். மனம் திருந்திய அரசியும் மற்றவர்களும் ஐயப்பனை பந்தள அரசராக பொறுப்பேற்று ரட்சிக்க சொன்னார்கள். ஆனால் தான் மண்ணுலகத் துக்கு வந்த காரியத்தை எண்ணி புறப்பட்டார்.
              மகிஷியால் ஏற்பட்ட தொல்லைகளைத் தாங்காத தேவர்கள், பொன்னம்பல மேட்டில் ஒன்று கூடி, தங்களை ரட்சிக்க வந்த ஹரிஹரசுதனை தியானித்து வழிபட்டார்கள். அதே நேரத்தில் பந்தள மன்னரின் அரண்மனையில் இருந்து புறப்பட்ட ஐயப்பன், தேவர்களின் துன்பம் போக்கிடத் திருவுள்ளம் கொண்டவராக மகிஷியுடன் கடுமையாகப் போரிட்டு வென்று, அவளை அழுதா நதிக்கரையில் வீழ்த்தினார். தான் மரணிக்கும் நேரத்தில் மகிஷிக்கு ஞானம் பிறந்தது. ஐயப்பனைச் சரண் அடைந்த மகிஷி, எப்போதும் தான் ஐயப்பனுடனே இருக்கவேண்டும் என்று பிரார்த்தித்தாள்.
             எதிரிக்கும் இரங்கும் ஈசன் மகன், அவளது விருப்பப்படியே தனது சந்நிதியில் மாளிகைப்புரத்து அம்மன் என்ற பெயரோடு இருக்க அருள் செய்தார். மகிஷியை வதம் செய்து மக்களைக் காத்த மணிகண்டனுக்கு என்று ஒரு கோயில் எழுப்ப தேவர்கள் எண்ணினர். அதன்படி ஐயப்பன் எய்த அம்பு விழுந்த இடத்தில் மணிகண்டனின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. தான் வந்த அவதார நோக்கம் நிறைவேறியது என்று உணர்த்திய கலியுக வரதன் கருணாமூர்த்தி ஐயப்பன், தேவர்களின் விருப்பப்படியே அந்த சிலையிலேயே அமர்ந்து தேவர்களுக்கு காட்சி அளித்தார்.
           பின்னர் ஐயப்பன் அமர்ந்த இடத்தில் பரசுராமரால் ஆலயம் எழுப்பப்பட்டது. அந்தச் சிறிய ஆலயத்தை மாற்றி அமைத்து பதினெட்டுபடிகளோடு உருவாக்கியவர் பந்தள அரசர் ராஜசேகரன்.
ஐயப்பன் அரண்மனையில் இருந்து விடைபெற்று சபரிமலைக்கு பயணித்து வந்தபோது அவருக்கு பணிவிடை செய்து அருள்பெற்றவர் தாய் சபரி.
ஐயப்பனின் அன்புக்கு அடிபணிந்து அவருக்கு தோழரானவர் வாவர் சாமி.
ஐயப்பனுக்கு காவலாக கருப்பணசாமி தனது பரிவாரங்களோடு இங்கு குடிபுகுந்தார்.
         இந்த மூவருமே ஐயப்பனின் சரிதத்தில் அன்பால் இடம் பெற்ற அருளாளர்கள். இந்த சபரிமலை யாத்திரையில் ஐயன் ஐயப்பன் ஏந்திச் சென்ற பொருட்களே இன்றும் இருமுடி பொருட்களாக அவரது பக்தர்களால் சுமந்து செல்லப்படுகிறது. அந்த பொருட்களே ஐயப்பனின் அபிஷேகத்துக்கும் பயன்படுகிறது.
           தூயதுறவியாக, துயர்தீர்க்கும் யோகியாக பதினெட்டு மலைகள் சூழ்ந்த சபரிமலையில் ஐயன் அமர்ந்து ஆட்சிபுரியத் தொடங்கினார். ஐயன் கடைப்பிடித்த விரத முறைகளே பக்தர்களால் இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது. சிவனுக்கும் திருமாலுக்கும் மகனாகப் பிறந்து, மண்ணுலகில் வளர்ந்து, கருணைப் பொழிந்த மணிகண்ட பிரபு கலியுகம் முடியுமட்டும் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களைக் காத்து அருள்புரிவார் என்பதும், தரிசித்து வழிபடும் அனைவருக்கும் மறுமை இல்லாத பேரின்ப நிலையினை அருள்வார் என்பதும் தொன்றுதொட்டு நிலவி வரும் நம்பிக்கை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.