Type Here to Get Search Results !

மகாத்மா அப்துல் கலாம்

“சர்வ வல்லமை வாய்ந்த கடவுளே, எனது மக்கள் வியர்வை சிந்தட்டும். அவர்களது உழைப்பு தீமையை அழிக்கும் மேலும் பல அக்கினிகளை உருவாக்கட்டும். எனது தேசம் அமைதியுடன் கூடி வளம் பெறட்டும். எனது மக்கள் இணைந்து வாழட்டும். ஒரு பெருமிதமிக்க இந்தியக் குடிமகன் என்ற புகழுடன் நான் இந்த மண்ணின் ஒரு துகளாக ஆகிவிடட்டும், மீண்டும் எழுந்து வந்து அந்தப் புகழில் இன்புறுவதற்காக.”
-  டாக்டர் அப்துல் கலாம், Ignited Minds  நூலின் இறுதி வரிகள்
தனது நீள்வட்டப் பாதையில் எண்பத்து மூன்று முறை சூரியனைச் சுற்றி வந்த ஓர் பூவுலக நிறைவாழ்வு தன் இயக்கத்தை நிறுத்தி விட்டது. ஆம், அவர் விரும்பியபடியே கலாம் மறைந்து விட்டார்.
ஒரு மகத்தான ஆதர்சமாக, வழிகாட்டியாக, நல்லாசிரியனாக, மனிதப் பண்புகளின் உறைவிடமாக இரண்டு தலைமுறை இந்தியர்களுக்கு தொடர்ந்து உத்வேகமூட்டி வந்திருக்கிறார் கலாம்.  இளைய உள்ளங்களில் கனவுகளுக்கான வேட்கையையும், முதிர்ந்த மனங்களில் சாதனைகளின் நினைவுகளையும், சவால்களையும் விட்டுச் சென்றிருக்கிறார்.
ராமேஸ்வரம் தீவில் எளிய குடும்பத்தில் பிறந்து, ராக்கெட்டுகளின் வழி பறந்து, ராஷ்டிரபதி பவனில் அமர்ந்த ஒரு அசாதாரணமான வாழ்க்கை அவருடையது. ஆனாலும், கலாம் என்றதும், புன்னகைக்கும் கண்களும், கலைந்துவிழும் கேசங்களும்,  இறுதிவரை தமிழ்த்தன்மை மாறாத ஆங்கில உச்சரிப்புடன் நம்மைத் தோளில் தட்டிக் கொடுத்து எழ வைக்கும் குரலும் தான் நினைவு வரும். அத்தகைய அலாதியானதொரு ஆளுமை அவருடையது.
ஒரு துடிப்பான அறிவியலாளராகத் தொடங்கி, வெற்றிகரமான அறிவியல் தொழில்நுட்ப நிர்வாகியாக, பாரத ரத்தினமாக அழுத்தமாகத் தனது முத்திரையைப் பதித்திருந்த கலாம் அவர்களை 2002ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க அரசு ஜனாதிபதியாக முன்னிறுத்தியது.  அந்த அரசு நம் நாட்டிற்குச் செய்த பல நன்மைகளில் முக்கியமானது இந்த மாபெரும் நற்செயல் என்றால் அது மிகையில்லை. இதன் மூலம் அறிவியல் வட்டங்களில் மட்டுமே பெரிய அளவில் அறியப் பட்டிருந்த கலாம்,  நாடறிந்த மக்கள் தலைவராக ஆனார். அந்தப் பீடத்திலிருந்து பேசியபோது அவரது மகத்தான எழுச்சி  மொழிகளுக்கும், இலட்சியவாதத்திற்கும், எதிர்கால இந்தியா குறித்த அவரது சிந்தனை வீச்சுகளுக்கும்  ஒரு தனித்த உயர்மதிப்பு ஏற்பட்டது.  அத்துடன், குடியரசுத் தலைவர் என்ற அந்தப் பதவிக்கே இதுவரை அதில் அமர்ந்த எந்தத் தலைவரும் அளித்திராத ஒரு புதிய பரிமாணத்தை கலாம் அளித்தார்.  பள்ளி கல்லூரி மாணவர்கள், தொழிலதிபர்கள், ஆன்மீக குருமார்கள், பல்துறை நிபுணர்கள் என்று அனைத்துத் தரப்பு மக்களிடமும் தொடர்ந்து உரையாடி “மக்களின் ஜனாதிபதி”யாக  அவர்களது இதயங்களில் இடம் பிடித்தார்.
ஒரு அறிவியலாளர் என்ற வகையில் கலாமின் ஆரம்பகால ஆய்வுகளுக்கும், புதிய கண்டுபிடிப்புகளுக்குமான நீண்டகால மதிப்பு என்ன என்று இன்று சில நிபுணர்கள் கேட்கலாம். இன்றுள்ள இளைய தலைமுறைக்கு அது எதுவும் பெரிதாகத் தோன்றாமல் இருக்கலாம்.  ஆனால், கலாம் பணியாற்றிய விண்வெளி,  ஏவுகணை, அணுசக்தி ஆகிய மூன்று துறைகளுமே முற்றிலும், தேசப் பாதுகாப்பு மற்றும் தேசத்தின் அதிமுக்கிய (strategic) தேவைகளுடன் தொடர்புடையவை என்பதை மனதில் கொள்ள வேண்டும். ஆய்வு மையங்களுக்கு வெளியே பொதுவில் அறிய முடியாத “மூடிய” அறிவியல் ஆய்வுகளையும், தொழில்நுட்பங்களையும் கொண்ட துறைகள் அவை. 1960-70களில் ரோஹிணி மற்றும் எஸ்.எல்.வி-3 செயற்கைக்கோள் வடிவமைப்புக் குழுவின் தலைவராக கலாம் ஆற்றிய பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 1980-90களில் அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த மேற்கத்திய நாடுகள் பல்வேறு அத்தியாவசியமான தொழில்நுட்பங்களைத் தர மறுத்த  நிலையிலும்,  ப்ருத்வி, ஆகாஷ், ஆக்னி, நாக், பினாகா ஆகிய ஏவுகணைகளை இந்தியா வெற்றிகரமாக உருவாக்கியதில்  கலாம் அவர்களின் தலைமைப் பொறுப்பும், பல்முனை வழிகாட்டுதல்களும் முக்கியப் பங்கு வகித்தன. அதன் பிறகு, உலக அரங்கில் இந்தியாவை வல்லரசாக நிலைநிறுத்திய போக்ரான் அணு ஆயுத பரிசோதனைகளிலும் கலாம் முக்கியமான பொறுப்பு வகித்தார்.
இந்த அனைத்து ப்ராஜெக்ட்களிலும், பல சிக்கலான புதிய தொழில் நுட்பங்களை கலாம் உட்பட பல இந்திய அறிவியலாளர்கள் இணைந்து தங்கள் அறிவுத் திறனாலும் கடும் உழைப்பாலும் தியாகத்தாலும் உருவாக்கினார்கள்.  தனிப்பெயர்களாக அன்றி, ஒட்டுமொத்த சாதனை என்ற அளவிலேயே அவர்களது அறிவியல் பங்களிப்புகளை இன்று நாம் நினைவு கூரமுடியும். ஒருவகையில், அவர்கள் அனைவரையும் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு ஒளிமிக்க குறியீடு கலாம் என்றே சொல்லலாம்.
இத்தகைய நீண்ட அனுபவத்தின் பின்னணியில் பின்னர் பிரதமரின் அறிவியல் ஆலோசகராகவும், இந்திய அரசின் நீண்ட கால தொழில்நுட்பக் கொள்கையை வகுக்கும் திட்டக் குழுவின் தலைமைப் பொறுப்புகளிலும் அவர் பணியாற்றினார்.  இத்திறக்கில் அவரது குழு சேகரித்த தகவல்களும், அதன் அடிப்படையிலான  நீண்டகால திட்டப் பரிந்துரைகளும் அரசு வட்டங்களுக்குள் அறிக்கைகளாக மட்டும் நின்றுவிடவில்லை. மாறாக, அவற்றை தனது புத்தகம் மூலமாகவும் (இந்தியா 2020, நண்பர் ஒய்.எஸ்.ராஜனுடைன் இணைந்து எழுதியது) பல்வேறு உரைகள் மற்றும் சந்திப்புக்கள் மூலமாகவும் நாட்டு மக்கள் அனைவரிடமும் அவர் பகிர்ந்து கொண்டார். இந்தியாவின் பல்துறை வளர்ச்சி குறித்த அறிவார்ந்த உரையாடல்கள் பொதுவெளியில் நிகழ்வதற்கு ஒரு முக்கிய காரணியாகவே இது இருந்தது.
*****
ஒரு சாதனையாளராக கலாமின் வெற்றிக் கதை லட்சக்கணக்கான கிராமப்புற ஏழை மாணவர்களிடையே மகத்தான தன்னம்பிக்கையையும், கல்வியின் மீது பெரும் பற்றையும் உண்டாக்கியது நிதர்சனமான உண்மை. எனது நண்பர்கள், சக பணியாளர்களின் வட்டங்களிலேயே அப்படிப் பட்டவர்களை நான் கண்டிக்கிறேன்.  இது கலாமின் சாதனை முகம்.
இந்தியாவின்  பல பகுதிகளில் பணிபுரிந்த போது,  அந்தப் பிரதேசங்கள் ஒவ்வொன்றுடனும் தன்னை இணைத்துக் கொண்ட கலாம்,  ஜனாதிபதியாக ஆவதற்கு முன்பே ஒரு அகில இந்தியத் தாரகை என்ற அளவில் மக்கள் மனதில் நிலைபெற்றிருந்தார். அவர் தமிழர் என்ற அளவில் நமக்கு என்றும் பெருமை தான், ஆனால் உண்மையில் மாநில எல்லைகளைக் கடந்த ஒரு அகில இந்திய ஆதர்சமாகவே அவர் விளங்கினார். இது கலாமின் தேசிய முகம்.
ஒரு பக்தியுள்ள இஸ்லாமியக் குடும்பத்தில் மௌல்வியின் மகனாகப் பிறந்து வளர்ந்த கலாம், ராமேஸ்வரத்தின் புனித சூழல் காரணமாக, சிறுவயது முதலே இந்து ஆன்மீகம் மற்றும் கலாசாரத்தின் மீது ஆழ்ந்த மரியாதையும் பற்றும் கொண்டிருந்தார்.  பின்னர் தனது வாசிப்பு, அனுபவங்கள் மற்றும் தேடல்களின் வழியே, மதங்களின் வெளித் தோற்றங்களுக்கு அப்பால் உள்ள ஆன்மீக சாரத்தை அவரால் உணர முடிந்தது. அஜ்மீர் ஷரீஃபின் தர்காவையும் திருக்குரானையும் மட்டுமல்ல, ஸ்ரீஅரவிந்தரையும், திருக்குறளையும், பகவத்கீதையையும் தனதெனக் கருதி அவரால் அரவணைக்க முடிந்தது. சாய்பாபாவுடனும் தலாய் லாமாவுடனும் உரையாட முடிந்தது. பிரமுக் சுவாமி மகாராஜை ஆன்மீக குரு என்ற நிலையில் ஏற்க முடிந்தது.  வீணைவாசிப்பில் லயித்து கர்நாடக இசையை ரசிக்க முடிந்தது.  இது கலாமின் ஆன்மீக முகம்.
அரசியல் ரீதியாகவும் கூட, மத அடிப்படைவாதங்களை முற்றிலும் நிராகரித்து, முஸ்லிம்கள் உட்பட அனைத்து இந்தியர்களுக்குமான பொது சிவில் சட்டத்தை அவர் ஆதரித்தார். இந்த வகையில் அனைத்து இந்திய முஸ்லிம்களும் பின்பற்றத் தகுந்த ஒரு ஆதர்ச முன்னுதாரணமாகவே அவர் திகழ்கிறார் எனலாம்.  இஸ்லாமிய மதவெறியர்களும் அடிப்படைவாதிகளும் அப்துல் கலாமை வெறுப்பதற்கும், அவரை முன்னிலைப் படுத்துவதைத் தவிர்ப்பதற்குமான காரணம் இது தான்.
*****
“செல்வச் செழிப்பும் ஆன்மீகமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை என்றோ, பொருட்களின் மீது ஆசை கொள்வது தவறு என்றோ நான் கருதவில்லை. உதாரணமாக, தனிப்பட்ட அளவில், குறைந்தபட்ச உடைமைகளுடன் வாழவே எனக்கு விருப்பம். ஆனால், செல்வச் செழிப்பை நான் போற்றுகிறேன், ஏனென்றால், அது தான் பாதுகாப்பையும் நம்பிக்கையையும் தருகிறது. அவையிரண்டின் மூலம் தான் நமது சுதந்திரத்தையே நாம் தக்க வைத்துக் கொள்ள முடியும்.  இயற்கையும் கூட எதையும் அரைகுறையாகச் செய்வதில்லை. உங்களைச் சுற்றி உள்ளவற்றைப் பார்த்தாலே இது புரியும். பிரபஞ்சமும் நாம் எண்ணிப் பார்க்க முடியாத அளவில், முடிவின்மையை நோக்கியே நீள்கிறது… “ [1]
கலாமின் இந்தச் சிந்தனை ஓட்டம் எப்படி காந்தியிடமிருந்து தெளிவாக வேறுபடுகிறது என்பதைக் காண முடியும்.  அவரே மேலும் கூறுகிறார் –
“கூடியவரை குறைந்த தேவைகளுடன் வாழவேண்டும் என்பதான துறவு வாழ்க்கையில் தவறு ஒன்றும் இல்லை. மகாத்மா காந்தி அவ்வாறு வாழ்ந்தவர் தான். ஆனால், அவரானாலும் சரி, நீங்களானாலும் சரி, அத்தகைய வாழ்க்கை தானாக தேர்ந்தெடுத்ததாக இருக்க வேண்டும். உங்களுக்கு உள்ளே எழும் ஒரு ஆழ்ந்த தேடலுக்கு விடைதேடும் முகமாக அத்தகைய வாழ்க்கைமுறையை நீங்கள் பின்பற்றுகிறீர்கள் என்றால் சரிதான். ஆனால், உங்கள் மீது திணிக்கப் பட்ட ஒரு வாழ்க்கையை தியாகமாக புனிதப் படுத்துவதும், அன்றாட கஷ்டங்களையே ஒரு கொண்டாட்டமாக எண்ணுவதும்  வேறு வகையானது.  நமது இளைஞர்களைத்  தொடர்பு கொண்டு நான் பேச விரும்பியது முக்கியமாக இந்த விஷயத்தைப் பற்றித் தான். அவர்களது கனவுகளை நான் அறிய வேண்டும்.  ஒரு நல்ல வாழ்க்கையை, செழிப்பான வாழ்க்கையை, மகிழ்ச்சிகளும் வசதிகளும் நிரம்பிய ஒரு வாழ்க்கையைக் கனவு காண்பதிலோ, அத்தகைய ஒரு பொற்காலத்திற்காக உழைப்பதிலோ எந்த விதமான தவறும் கிடையாது. சொல்லப் போனால், அதுவே மிகச் சரியானது என்று நான் அவர்களுக்குச் சொல்வேன்.  நீங்கள் எந்த வேலையைச் செய்தாலும், அது உங்கள் இதயத்திலிருந்து வந்ததாக இருக்க வேண்டும். உங்களது ஆத்மாவை வெளிப்படுத்த வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே உங்களைச் சுற்றி அன்பையும் மகிழ்ச்சியையும் உங்களால் வெளிப்படுத்த முடியும்” [2]
தன்னளவில் மிக அமைதியான ஆன்மீகமான  மனிதநேயராக இருந்த கலாம் தான், ஒரு கர்மயோகியாக ஏவுகணைகளையும் அணு ஆயுதங்களையும் தேசத்திற்காக உருவாக்கினார்.  கூடங்குளம் உள்ளிட்ட அனைத்து பிரசினைகளிலும், சமரசமின்றி நவீன அறிவியலின்,  “வளர்ச்சியின்” பக்கம் நின்று பேசினார். தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு துறவியாக, மிகக் குறைந்த தேவைகளுடன், மிக எளிய வாழ்க்கை வாழ்ந்த கலாம் தான், அனைத்து மக்களும் அனைத்து வசதிகளையும்  பெறும் வகையில் இந்தியா 2020ம் ஆண்டுக்குள் “வளர்ந்த நாடாக” ஆக வேண்டும் என்பதை ஒரு இலட்சியக் கனவாக வலியுறுத்தி வந்தார்.  அவரைப் பொறுத்தவரை  இந்த இரண்டுக்கும் இடையில் எந்த முரண்பாடும் இருக்கவில்லை என்பதை அவரது மேற்கண்ட வாசகங்களிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
தான் ஏற்ற ஒவ்வொரு பணியிலும் தன்னைத் திரியாக எரித்து, ஓயாமல் ஒழியாமல் உழைத்த ஒரு மனிதர்.  இறுதிக் கணத்திலும்  மாணவர்களிடையே  உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே உயிர்நீத்த ஒரு மனிதர்.  அவரை இப்படி இயக்கிய மகாசக்தி எது?
இந்த மண்ணின் மீதும், மக்களின் மீதும் அவர் கொண்டிருந்த அளப்பரிய பாசமும் நேசமும் தான்.
அதனால் தான் அந்த உத்தமர் உயிர் நீத்த இந்தத் தருணத்தில் ஒட்டுமொத்த தேசமும் பாசத்துடனும் நன்றியறிதலுடனும் கண்ணீர் விடுகிறது.
கலாம் சார், காலத்தை வென்று நிற்கும் நீங்கள் விட்டுச் சென்ற கனவுகள். என்றும் அணையாது எரியும் எங்களது இதயங்களில் நீங்கள் ஏற்றி வைத்த எழுச்சி தீபங்கள்.  நீங்கள் விரும்பியபடியே  இந்த மண்ணில் மீண்டும் வேறு வடிவில் எழுந்து வருவீர்கள்.
ஓம் சாந்தி.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.