Type Here to Get Search Results !

ஆண்டாள் கோயில், ஸ்ரீவில்லிப்புத்தூர்

ஆண்டாள் கோயில், ஸ்ரீவில்லிப்புத்தூர் 

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் 2000 ஆண்டுகள் பழமையானது. இதன் 11 அடுக்குகள் கொண்ட 193 அடி உயர ராஜகோபுரம் அந்த காலகட்டத்தில் இந்தியாவின் மிகப்பெரிய கோபுரமாக கருததப்பட்டது. இந்தக் கோயிலை பெருமைப்படுத்தும் விதமாக பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் ஆண்டாள் கோயிலின் கோபுரம் தமிழக அரசின் சின்னமாக அறிவிக்கப்பட்டது
இப்பகுதி மல்லி என்ற அரசியின் ஆட்சியில் இருந்தது. வில்லி காட்டை திருத்தி கோயில் எழுப்பி அழகிய நகரமைத்தான். இதனாலே வில்லிபுத்தூர் எனும் பெயர் பெற்றது. திருமலைநாயக்கர் மற்றும்இராணிமங்கம்மாள் தங்கள் ஆட்சிகாலத்தில் இவ்வூர் கோயில்களில் பல திருப்பணிகளை செய்துள்ளனர்,

புராணம்

ஸ்ரீவில்லிப்புத்தூர் முன்னொரு காலத்தில் வராக சேத்திரம் என்று அழைக்கப்பட்டது. சேத்திரத்தின் ஒரு பகுதியாக ஒரு காடும் இருந்தது. அதில் வில்லி, கண்டன் என்ற இரண்டு வேடுவ சகோதரர்கள் இருந்தார்கள். அவர்கள் ஒரு நாள் வேட்டையாடி வரும் போது கண்டன் புலி ஒன்றை துரத்தி செல்கிறான். அவனை புலி கொன்று விடுகிறது. இதை அறியாத வில்லி தன் தம்பியை தேடி அலைகிறான். சோர்வடைந்து மரத்தடியில் தூங்குகிறான். அவன் கனவில் பெருமாள் தோன்றி கண்டனுக்கு நேர்ந்த நிலையை கூறுகிறார். பின்னர்
தாம் இங்கு 'காலநேமி' என்ற அசுரனை வதம் செய்வதற்காக எழுந்தருளியதாகவும் பின்னர் இந்த ஆலமரத்தினடியில் உள்ள புதருக்குள் "வடபத்ரசாயி" என்கிற திருநாமத்துடன் காட்சி அளிக்கபோவதாகவும் கூறி, இந்த காட்டை அழித்து நாடாக்கி தமக்கு கோயில் எழுப்பி ஆராதனை செய்து வரும்படி கூறி மறைகிறார். இதனால் இந்த ஊருக்கு "ஸ்ரீவில்லிப்புத்தூர்" என்று பெயர் வந்தது என்று தலபுராணம் கூறுகிறது
இந்தியாவில் 1956 இல் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போது, தமிழ் பேசும் பகுதிகள் சென்னை மாகாணமாக உருப்பெற்றன.அந்த காலகட்டத்தில் சென்னை மாகாண முதல்வராக இருந்த காமராசர் தலைமையிலான அரசு, அரசாங்க சின்னமாக திருவில்லிபுத்தூர் கோயில் கோபுரத்தைத் தேர்ந்தெடுத்தனர்..மதச்சார்பற்ற நாட்டில் மதரீதியான இடங்களை, முத்திரையில் வைக்கக் கூடாது என்று கோரி 2013இல் தொடுத்த பொது நல மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஆடிப்பூர தேரோட்ட உற்சவம்

18 ஆண்டுகள் ஓடாதிருந்த ஆண்டாள் நாச்சியார் பெரியதேர் பல நூற்றாண்டு பழமைவாய்ந்தது. கலைநயமிக்க பல மரசிற்பங்களும் ஒன்பது மர சக்கரங்களும் ஒன்பது மேலடுக்கு சாரம் அலங்கார பதாகைகளும் அதன் உச்சியில் கும்ப கலசம் (ஐந்து பகுதி இணைக்கப்பட்டது) பட்டு கொடியும், ஒன்பது பெரிய வடமும் அமையப்பெற்றது. தேரோட்ட உற்சவத்தில் சுற்று வட்டார கிராமங்களுக்கு கோபுரமும் திருத்தேரும் கம்பீரமாக காட்சியளிக்கும். பத்து கி.மீ தொலைவிலும் தேர் எந்த ரதவீதியில் உள்ளது என அறியலாம். தேரோட்ட உற்சவத்தில் வடம் பிடித்து மக்கள் இழுக்க, நின்ற தேர் நகர மறுத்தால் தேரின் பின் சக்கரங்களில் பெரிய கனமான மரத்தடியால் உந்தித் தள்ளுவர். எண்ணை தடவிய கனமான மர சறுக்குக்கட்டைகளால் தேரை நிறுத்தவும் பக்கவாட்டில் திருப்பவும் செய்வர்.
காலபோக்கில் மரசக்கரங்கள் சேதமுற்றதால் அதிக செலவு கருதி 18 ஆண்டுகள் ஓடாதிருந்தது. மாற்று சிறிய தேர் பயன்பட்டது. மீண்டும் பெரிய தேரை சீரமைத்து இழுத்தபோது அலங்கார மேலடுக்கு சாரம்,கலசம் சரிந்து கீழே விழுந்து பல உயிர்பலி நேர்ந்தது.
முன்பு வலிமைவாய்ந்த மக்கள் இத்தேரை நான்கு ரதவீதிகளில் சுற்றி நிலைக்குவர மூன்று மாதங்கள் ஆகும். பாதுகாப்பு கருதி அலங்கார மேலடுக்கு எண்ணிக்கையைக் குறைத்து, இரும்பு அடிசட்டம்,விசைத்தடையுடன் கூடிய நான்கு இரும்பு சக்கரம் அமைத்து தேர் நவீனப்படுத்தப்பட்டது. தற்போது தேரோட்ட உற்சவம் ஒரேநாளில் நடந்து முடிந்து விடுகிறது.(தேர் நிலைக்குவர மூன்று மணி நேரமே)

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.