Type Here to Get Search Results !

புரட்டாசி மாதம் விரதம் இருந்து சிவபெருமானை வழிபடுவது பற்றி

புரட்டாசி மாதம் என்றால் பெருமாளுக்கு மிகவும் உகந்த மாதம் என்பதும், விரதம் இருந்து பெருமாளை வழிபடுவது மரபு என்பதும் நமக்கெல்லாம் தெரியும். அதேபோல, புரட்டாசி மாதம் விரதம் இருந்து சிவபெருமானை வழிபடுவது பற்றியும் ஒரு புராண நிகழ்ச்சி உண்டு.
விநாயகப் பெருமானைக் குறித்து கடுந்தவம் இயற்றிய கிருச்சமத முனிவர், விநாயகப் பெருமானின் தரிசனமும், பல வரங்களும் பெற்றார். அந்த வரங்களில் ஒன்றாக, சிவபெருமானைத் தவிர யாராலும் அழிக்க முடியாத அளவுக்கு வலிமை கொண்ட மகன் ஒருவனையும் தம் யோக சக்தியினால் பெற்றார்.

‘பலி’ என்ற பெயர் கொண்ட அவன், தன் தந்தையைப் போலவே விநாயகரிடம் அளவற்ற பக்தி கொண்டு விளங்கினான். நெடுந்தவம் புரிந்து விநாயகரின் தரிசனம் பெற்ற பலி, ‘மூவுலகங்களையும் தான் அடிமைப்படுத்தி ஆள வேண்டும்’ என்று வரம் கேட்டுப் பெற்றான். கணபதிக் கடவுளும் அப்படியே அருள் புரிந்ததுடன், அவனுக்கு இரும்பு, வெள்ளி, பொன் ஆகிய மூன்று உலோகங்களால் ஆன கோட்டையையும் கொடுத்து அருளினார்.
அதே நேரத்தில், ”பெற்ற வரங்களை நீ தவறாகப் பயன்படுத்தினால், சிவபெருமானின் திருக்கரத்தில் உள்ள கணை ஒன்றினால் உன்னுடைய கோட்டைகள் அழியும். அப்போதே, நீ எம்முடைய பக்தன் என்பதாலும், சிவபெருமானால் சம்ஹாரம் செய்யப்படுவதாலும் உனக்கு வீடுபேறு உண்டாகும்” என்றும் வரம் தந்து அருளினார்.
வரம் பெற்ற பலி, மூவுலகங்களையும் தன் வசப்படுத்தியதுடன், தேவர்கள் யாவரையும் பல வழிகளிலும் துன்புறுத்தவே, ஓடி ஒளிந்த தேவர்கள், நாரதரிடம் சென்று வழி கேட்டனர். அவர் சொல்லியபடியே விநாயகரைப் பிரார்த்தித்துக் கொண்டு சிவபெருமானிடம் தஞ்சம் அடைந்தனர்.
தேவர்களின் துன்பத்தை நீக்கிட திருவுள்ளம் கொண்ட சிவபெருமான், திரிபுரனுடன் போருக்குச் செல்ல ஒரு காரணம் வேண்டும் அல்லவா? அதற்கான அவசியத்தை விநாயகர்
ஏற்படுத்தினார். வேதியராக வேடம் கொண்டு திரிபுரனிடம் சென்ற விநாயகர், திருக்கயிலையில் இருக்கும் சிந்தாமணி விநாயகரின் திருவுருவம் தமக்கு வேண்டும் என்று கேட்டார். அந்தண வடிவில் வந்த விநாயகரின் விருப்பத்தை நிறைவேற்ற நினைத்த திரிபுரன், திருக்கயிலைக்கு தூதர்களை அனுப்பி வைத்தான்.
திரிபுரனின் தூதர்களிடம் சிந்தாமணி கணபதியைத் தர மறுத்த  சிவபெருமான், முடிந்தால் தன்னுடன் போரிட்டு வென்றால், சிந்தாமணி கணபதியை எடுத்துச் செல்லலாம்
என்று கூறிவிட்டார். திரும்பி வந்த தூதர்களின் மூலம் நடந்ததைத் தெரிந்துகொண்ட திரிபுரன், படைகளைத் திரட்டிக்கொண்டு சிவபெருமானுடன் போருக்குச் சென்றான்.
நீண்ட நாட்கள் நடைபெற்ற போரின் முடிவில், சிவபெருமான் தம்முடைய திருக்கரத்தில் இருந்த கணையைச் செலுத்தி திரிபுரனை சம்ஹாரம் செய்தார். ஏவிய கணை திரும்பவும் சிவபெருமானின் திருக்கரத்தை அடைவதற்கு முன்பாகவே திரிபுரன் சிவபெருமானை திருவடிகளில் ஒன்றிக் கலந்தான்.
திரிபுரன் வீடுபேறடைந்த திருநாள்…
இப்படி, சிவபெருமானின் திருக்கரங்களால் திரிபுரன் வீடுபேறு அடைந்தது புரட்டாசி மாத பெளர்ணமி தினமாகும். அந்த நாளை பாகுளி என்று எல்லோரும் அழைக்கிறார்கள்.
ஆண்டுதோறும் இந்தத் திருநாளில், சிவபிரானுக்குத் திருவிழா செய்வதாலும், அவரவர்களுடைய ஆற்றலுக்கேற்றவாறு வழிபாடு முதலியவற்றை செய்வதாலும், நெய் தீபம்
ஏற்றி வழிபடுவதாலும் அப்படிச் செய்பவர்களை எப்பொழுதும் துன்பம் என்பதே நெருங்காது.
திரிபுரனால் தேவர்கள் துன்பப்பட்டது போன்ற நிலைமை நமக்கு ஏற்படக் கூடாது என்றால், புரட்டாசி மாதம் பெளர்ணமி தினத்தில் சிவபெருமானை வணங்கி வழிபட வேண்டும். அன்றைய தினம் காலையில் சிவ வழிபாடு செய்ய, முற்பிறப்பில் செய்த பாவங்கள் நீங்கும். நடுப்பகலில் சிவ வழிபாடு செய்ய, முற்பிறப்பில் செய்த பாவங்கள் மட்டும் இல்லாமல், இந்தப் பிறவியில் செய்த பாவங்களும் நீங்கும். மாலை பிரதோஷ வேளையில் சிவ வழிபாடு செய்தால், சிவபெருமானின் அருளால் ஏழேழு பிறவிகளில் செய்து முற்றிய பாவங்கள் எல்லாமே நீங்குவதுடன், விரும்பிய எல்லா கோரிக்கைகளும் நிறைவேறப் பெறலாம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.