Type Here to Get Search Results !

திருமூலர் மந்திர ரகசியம்.....

 


மகாவிஷ்ணுவின் விசேஷ அவதாரங்கள் - பத்து.
ராவணன் தலைகள் - பத்து.
ஞான, கர்ம இந்திரியங்கள் - பத்து.
‘பத்துடையீர் ஈசன் பழ அடியீர்’ என, சிவனடியார்களுக்கு உண்டான
குணங்களாக மாணிக்கவாசகர் குறிப்பது - பத்து.

பசி வந்திடப் பத்தும் பறந்து போகும் என குறிப்பிடப்படுவதும் பத்து.
இப்படிப்பட்ட ‘பத்து‘ என்பதைப் பற்றித் திருமூலர் என்ன சொல்கிறார் எனப் பார்க்கலாம்.
தூய்மை அருள் ஊண் சுருக்கம் பொறை செவ்வை
வாய்மை நிலைமை வளர்த்தலே மற்று இவை
காமம் களவு கொலை எனக் காண்பவை
நேமி ஈர் ஐந்து நிய  மத்தன் ஆமே!
(திருமந்திரம் - 556)

கருத்து: தூய்மையான மனம், கருணை காட்டும் உள்ளம், குறைவாக உண்ணுதல் - அதாவது, வயிறுமுட்ட உண்ணாதிருத்தல் - பொறுமை, நேர்மை, உண்மை பேசுவது, நடு
நிலைமை தவறாமல் இருப்பது எனும் ஏழு
நற்குணங்களையும் வளர்த்துக் கொள்வது.

இவ்வாறு வளர்க்க வேண்டிய ஏழு அம்சங்களைச் சொன்ன திருமூலர், நீக்க வேண்டிய மூன்றையும் சொல்லி, இப்பாடலைத் தலைக் கட்டுகிறார்.
அவை, பண்ணாசை, திருட்டு, கொலை என்பவை. திருமூலர் சொல்லும் இவற்றைப் பார்க்கும்போது, நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், இவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்துவது சாத்தியமா? இக்காலத்தில், அவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்த முடியுமா? 

செயல்படுத்தித்தான் ஆகவேண்டும். அதிலும் குறிப்பாக, நீக்க வேண்டியவை என்னும் பட்டியலில் உள்ள மூன்றையும் நாம் நீக்காவிட்டால், கண்டிப்பாக நாம் அரசாங்க தண்டனையில் இருந்து, ஒருக் காலும் தப்பமுடியாது. பிறகு பெண்ணாசை, திருட்டு, கொலை ஆகியவற்றிற்கு, அரசாங்கம் விருது அளித்துப் பாராட்டுவிழாவா நடத்தும்?

ஆகையால், இந்த மூன்று குற்றங்களில் இருந்து, நாமே எச்சரிக்கையாக விலகித்தான் இருப்போம். மீதி உள்ள, நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஏழில், அந்த ஏழு நற்குணங்களையும் நம்மால் கடைப்பிடிக்க முடிகிறதோ, இல்லை யோ, அவற்றில் ஒருசிலவற்றையாவதுநாம் கடைப்பிடித்துத்தான் ஆகவேண்டும்.

குறிப்பாக, குறைவாக - அளவாக - உண்ணுதல்.  இதை, திருமுருக கிருபானந்த வாரியார் மிகவும் நயமாகக் கூறுவார். ‘‘பாதி வயிறுதான் உண்ண வேண்டும். கால் வயிறு தண்ணீர் குடிக்கலாம். மீதி கால் வயிறு காலியாகத்தான் இருக்க வேண்டும். அப்போதுதான் ஆரோக்கியமாக இருக்கலாம். வயிறு முட்டத் தின்றால் நம் உடம்பில் நோய்கள் வந்து கூடாரம் அடித்துக் குடிபுகும்’ என்பார்.

ஆகையால், நாம் நலம் பெற வேண்டும் என்றால், முதலில் உணவில் கட்டுப்பாடு வேண்டும்.
அடுத்தது பொறுமை. தற்போது, நம் அனைவருக்கும் அவசரத் தேவை, அவசியத் தேவை ‘பொறுமை’தான்.யாருக்கும் எதற்கும் பொறுமை இல்லை.

விதையை நட்டுவிட்டு, உடனே பழத்தை எதிர்பார்க்கிறோம். எல்லாவற்றிலும் எப்போதும்
அவசரம்! நம்மால் முடியாதவற்றை நம் குழந்தைகள் தலையில் சுமத்தி, ஐந்து வயதிலேயே அவர்கள் அகில உலகப் புகழ் பெற வேண்டும் என்று, அவர்களைப் படாதபாடு படுத்திக் கொண்டிருக்கிறோம்.

திருமூலர் சொன்ன, கடைப்பிடிக்க வேண்டிய ஏழில், பொறுமையைக் கடைப்பிடிக்கத் தொடங்கினாலே போதும், கண்டிப்பாக, நமக்கு நல்லதொரு வழி பிறக்கும்.
அந்தப் பொறுமையுடன் வாருங்கள்! அடுத்ததாக, இன்னொரு பத்தைச் சொல்கிறார் திருமூலர்.
அந்தப் பத்து என்னவென்று
பார்க்கலாம்!
தவம் செபம் சந்தோடம்
 ஆத்திகம் தானம்
சிவன் தன் விரதமே
 இத்தாந்தக் கேள்வி
மகம் சிவபூசை ஒண்மதி சொல் ஈர் ஐந்தும்
நிலம் பல செய்யின்
நியமத்தன் ஆமே!
(திருமந்திரம் - 557)

கருத்து: தவம், செபம், சந்தோஷம், தெய்வ நம்பிக்கை, அடுத்தவர்க்குக் கொடுத்து உதவுவது, சிவ விரதம், சித்தாந்த அறிவு, யாகம், சிவபூஜை, தூய்மையான தெளிந்த ஞானம் ஆகிய பத்தும் உயர்வு தரும். இவற்றைக் கடைப்பிடித்து வாழ்பவனே உண்மையான ஆன்மிகவாதி.
முந்தையப் பாடலில், கொள்ள வேண்டியவை ஏழு, தள்ள வேண்டியவை மூன்று என்று சொன்ன திருமூலர், இப்பாடலில் ‘கொள்ள வேண்டியவை என்று பத்துவிதமான தகவல்களைச் சொல்கிறார். இந்தப் பத்தும், நமக்கு ஓரளவிற்காவது தெரிந்தவைதான்.

இருந்தாலும் சற்று விரிவாகப் பார்க்கலாம். ஒருசில உண்மைகள் புரியும். முதலில், திருமூலர் சொன்ன அந்தப் பத்தில், முதலில் இடம் பெற்றிருப்பது - தவம்.
தவம் என்ற வார்த்தையைக் கேட்டதும், நம் அனைவருக்கும் ‘காட்டுக்குப் போய் மூச்சடக்கி, பேச்சடக்கி தாடி, மீசை வளர்த்துக் கொண்டு, கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்திருப்பது’ என்ற எண்ணம்தான் வரும்.ஆனால், அது தவமல்ல.

எவன் ஒருவன், தன் கடமையை ஒழுங்காக, தவறாமல் செய்கிறானோ, அவன்தான் தவம் செய்பவன், என்று வள்ளுவர் சொல்கிறார். அது மட்டுமல்ல! அப்படிக் கடமையைச் செய்யாதவன், ஆசையில் சிக்குண்டு, (தனக்கே) கெடுதியைச் செய்பவன் ஆவான் என்றும் சொல்கிறார்.

தவம்செய்வார் தம்கருமம் செய்வார், மற்றல்லார்அவம்செய்வார் ஆசையுள் பட்டு. (குறள் 266)தன் கடமையைச் செய்வதுதான் தவமே தவிர, காட்டிற்குப் போய் சாமியாராகக் கண்களை மூடிக்கொண்டு இருப்பது தவமல்ல என வள்ளுவர் சொன்னதைப் பார்த்தோமல்லவா! அடுத்தது, இப்பாடலில் இடம் பெற்றிருக்கும் ‘சந்தோஷம்’ என்ற சொல்லைப் பார்க்கலாம்.

நாய், நரி, கழுதை, குரங்கு எனப் பலவிதமான பிறவிகள் இருக்க, நமக்கு உயர்ந்ததான மனிதப் பிறவி கிடைத்ததே, அதை எண்ணி சந்தோஷப்பட வேண்டும். அதிலும், பார்வை இல்லாமல், காது கேளாமல், உடல் ஊனமாகப் பிறக்காமல், நம்மை நல்லபடியாகப் பிறக்க வைத்ததற்கு சந்தோஷப்பட வேண்டும். ‘ஆண்டவா! எவ்வளவோ பேர் உடலில் குறையோடு பிறக்கும் போது, என்னை நல்லவிதமாகப் பிறக்கச் செய்தாயே, நன்றி!’ எனத் தெய்வத்தை நினைக்க வேண்டும். இதை நாம் உணரவேண்டும் என்பதற்காகவே, சந்தோஷம் என்ற சொல்லைத் தொடர்ந்து ‘ஆத்திகம்’ என்ற சொல்லைத் திருமூலர் பதிவு செய்திருக்கிறார். அடுத்து, நம் கடமையைச் செய்ய வேண்டும். உயர்ந்ததான குறைவில்லாத மனிதப் பிறவி கிடைத்ததற்காக மகிழ வேண்டும் என்பதெல்லாம் சரி! இந்த இரண்டு மட்டும் போதுமா?

நாம் யார்? நம்மைப் படைத்த இறைவன் யார்? நமக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பு என்ன? என்பனவற்றை அறிந்தால்தானே அமைதி கிடைக்கும்? அதனால், அவற்றையும் இப்பாடலில் குறிப்பிட்டு, நம்மை அறியத் தூண்டுகிறார் திருமூலர். இதைத் தொடர்ந்து, அவ்வாறு தன்னை அறியாமல் இருந்து என்ன பயன்?
எல்லோரையும் போல, நமது பெயரும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இருப்பதில் யாருக்கு என்ன லாபம்?

திருமூலர் எச்சரிக்கத் தொடங்குகிறார். சாதாரணமாகவே, அறிவுரை அல்லது எச்சரிக்கை என்று சொன்னால், யாருக்குமே பிடிக்காது.
அதுவும் திருமூலர் சொல்லும் இந்த எச்சரிக்கை, பிடிக்காததோடு, பயத்தை ஊட்டவும் கூடியது.
தன்னை அறியாது தான் நல்லன்
என்னாது இங்கு
இன்மை அறியாது இளையார்
என்று ஓராது
வன்மையில் வந்திடும் கூற்றம்
வருமுன்னம்
தன்மையும் நல்ல தவம் செய்யும் நீரே!
(திருமந்திரம் - 555)

இந்தப் பாடலில் விளக்கத்தைப் பார்ப்பதற்கு முன்னால், ஒரு தகவலைப் பார்த்துவிட்டு வரலாம்.
ஒரு வண்டியில் ஏறிவிட்டோம். விரும்புகிறோமோ இல்லையோ, இறங்க வேண்டிய இடம் வந்தால், இறங்கித்தான் ஆகவேண்டும். அதுபோல, வாழ்க்கைப் பயணத்தில், உடம்பு என்ற வண்டியில் ஆன்மா ஏற, பயணம் தொடங்கிவிட்டது. இறங்க (இறக்க) வேண்டிய இடம் எது? காலம் எது?
என்பதெல்லாம் தெரியாது. யமன் வந்தால் போக வேண்டியதுதான்.

இனி திருமூலரின் விளக்கம்: யாருக்கும்
தெரியாமல் அவரவர் உயிரைக் கவர்வதற்காக வரும் யமன், அவன் நல்லவனா? கெட்டவனா? எப்படிப்
பட்டவன் என்றெல்லாம் பார்க்க மாட்டான்.

நல்லவனாயிற்றே என்று விட்டுவிட மாட்டான். ஐயோ பாவம்! இவன் ஏழை, இவன் சிறுபிள்ளை என்றெல்லாம் பார்க்க மாட்டான். அந்த யமன் மிகவும் சக்தி படைத்தவன். ஆகையால், அவன் வருவதற்குள் நல்லதான தானத்தைச் செய்யுங்கள். தவத்தைச் செய்யுங்கள் என்கிறார் திருமூலர். இறப்பு என்ற வார்த்தையைப் பத்திரிகைகளில் படித்தால் கூட, அந்தப் பக்கத்தை அப்படியே திருப்பிவிடக் கூடிய இக்காலத்தில், இப்பாடலுக்கு இதற்கு மேல் உண்டான விளக்கத்தை இங்கு அடியேன் எழுதப் போவதில்லை.

முடிவு காலத்தை நெருங்குவதற்குள் தானம் செய்யுங்கள். தவம் செய்யுங்கள். எனத் திருமூலர் சொன்னதை, மிகவும் ஆழமாகப் பார்க்க வேண்டும். தவம் என்பது, தன் கடமையை ஒழுங்காகச் செய்வது என்று ஏற்கனவே பார்த்தோம். அதன்படி, அவரவர், கடமையை ஒழுங்காகச் செய்வதுடன், வாக்காலும் பொருளாலும் அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும்.
நான் நல்லவன், என்னால்தான் இப்படி கொடுக்க முடியும், செய்ய முடியும் என்ற எண்ணமில்லாமல் செய்ய வேண்டும்.

‘‘ம்ஹும்! என்கிட்ட கையில காசு இல்ல! என்கிட்ட மட்டும் இருந்துச்சுன்னா ஊருக்கே அள்ளிக் கொடுப்பேன்’’ என்று வாய்ப்பந்தல் போடக்கூடாது. பொருள் இல்லாவிட்டால் என்ன? வார்த்தைகளால் அடுத்தவர்களுக்கு நம்பிக்கை ஊட்டலாமே!  அதைச் செய்ய வேண்டும். இப்படிப்பட்ட நல்ல பழக்க வழக்கங்களை எல்லாம் சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற தகவலையும் இங்கே நம்மை உணர வைக்கிறார் திருமூலர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.