Type Here to Get Search Results !

Margazhi-Masam-2020-9 : மார்கழி 9 ஆம் நாள் : திருப்பாவை


மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையை இனிய குரலில் பாடி இறையருள் பெறுங்கள்!!

மார்கழி மாதம் (Margazhi Masam) கடவுளை வழிபடும் மாதமாகும். இம்மாதத்தில் எவ்வித மங்கல நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை. மார்கழி மாதம் விரதம் இருந்து விஷ்ணுவை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி செல்வ செழிப்பைப் பெறுவர்.

மார்கழியில் அதிகாலை எழுந்து, வீட்டை சுத்தம் செய்து, நீராடி, கோலமிட்டு, திருப்பாவை (Thiruppavai), திருவெம்பாவை பாடல்களைப் பாட வேண்டும். மார்கழி மாதங்களில் வீட்டு முன்பு கோலமிட்டால் மகாலட்சுமி வீடு தேடி வருவாள் என்பது நம்பிக்கை. இதனால் பெரும்பாலானோர் மார்கழியில் கோலமிடுகின்றனர். மேலும் விஷ்ணு ஆலயங்களில் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடுவர்.

இந்த மாதத்தில் திருப்பதி திருமலையில் (Venkateswara Temple) காலையில் சுப்ரபாதம் பாடுவதற்கு பதிலாக ஆண்டாளின் திருப்பாவை பாடுவார்கள். இந்த மாதத்தில் எல்லா பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்கு பதில் திருப்பாவை பாடுவார்கள்.

இந்நிலையில் மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையை இனிய குரலில் பாடி இறையருள் பெறுங்கள்.

ஒன்பதாவது பாடல்: 

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்
மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ?
ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.

பொருள்:- பிரகாசமான நவரத்தினங் களால் கட்டப்பட்ட மாளிகையில், சுற்றிச்சூழ விளக்கெரிய, நறுமணதிரவியம் மணம் வீச, அழகிய பஞ்சுமெத்தையில் உறங்கும் எங்கள் மாமன் மகளே! உன் வீட்டு மணிக்கதவைத் திறப்பாயாக. எங்கள் அன்பு மாமியே! அவளை நீ எழுப்பு. உன் மகளை எத்தனை நேரமாக நாங்கள் கூவி அழைக்கிறோம்! அவள் பதிலே சொல்லவில்லையே! அவள் ஊமையா? செவிடா? சோம்பல் அவளை ஆட்கொண்டு விட்டதா? அல்லது எழ முடியாதபடி ஏதாவது மந்திரத்தில் சிக்கி விட்டாளா? உடனே எழு. எங்களுடன் இணைந்து மாயங்கள் செய்பவன், மாதவத்துக்கு சொந்தக்காரன், வைகுண்டத்துக்கு அதிபதி என்றெல்லாம் அந்த நாராயணனின் திருநாமங்களைச் சொல்.

விளக்கம்:- உலக மக்கள் மாடமாளிகை, பஞ்சு மெத்தை என சொகுசு வாழ்க்கையில் சிக்கி சோம்பலில் கட்டுண்டு கிடக்கின்றனர். இதில் இருந்து அவர்களை மீட்டு பகவானின் இருப்பிடமான வைகுண்டமே நிலையானது என்பதை அறிவுறுத்த வேண்டும். அந்த வைகுண்டத்தை அடைய பகவானின் திருநாமங்களைச் சொல்ல வேண்டும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.