Type Here to Get Search Results !

Margazhi-Masam-2020-17 : மார்கழி 17 ஆம் நாள் : திருப்பாவை


மார்கழி மாதம் கடவுளை வழிபடும் மாதமாகும். இம்மாதத்தில் எவ்வித மங்கல நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை. மார்கழி மாதம் விரதம் இருந்து விஷ்ணுவை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி செல்வ செழிப்பைப் பெறுவர்.

மார்கழியில் (Margazhi Masam) அதிகாலை எழுந்து, வீட்டை சுத்தம் செய்து, நீராடி, கோலமிட்டு, திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களைப் பாட வேண்டும். மார்கழி மாதங்களில் வீட்டு முன்பு கோலமிட்டால் மகாலட்சுமி வீடு தேடி வருவாள் என்பது நம்பிக்கை. இதனால் பெரும்பாலானோர் மார்கழியில் கோலமிடுகின்றனர். மேலும் விஷ்ணு ஆலயங்களில் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடுவர்.

இந்த மாதத்தில் திருப்பதி திருமலையில்  (Venkateswara Temple) காலையில் சுப்ரபாதம் பாடுவதற்கு பதிலாக ஆண்டாளின் திருப்பாவை பாடுவார்கள். இந்த மாதத்தில் எல்லா பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்கு பதில் திருப்பாவை பாடுவார்கள்.

இந்நிலையில் மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையை இனிய குரலில் பாடி இறையருள் பெறுங்கள்.

17-வது பாடல்:-

அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்!
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த
உம்பர்கோமானே! உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கலோர் எம்பாவாய்.

பொருள்:- ஆடைகளையும், குளிர்ந்த நீரையும், உணவும் பிறர் திருப்திப்படும் அளவுக்கு தர்மம் செய்யும் எங்கள் தலைவரான நந்தகோபரே! தாங்கள் எழுந்தருள வேண்டும். கொடிபோன்ற இடைகளையுடைய பெண்களுக்கு எல்லாம் தலைவியான இளகிய மனம் கொண்ட யசோதையே! மங்களகரமான தீபம் போன்ற முகத்துடன் பிரகாசிப்பவளே! நீ எழ வேண்டும். விண்ணையே கிழித்து உன் திருவடிகளால் உலகளந்த தேவர்களின் தலைவனான எங்கள் கண்ணனே! நீ கண் விழிக்க வேண்டும். செம்பொன்னால் செய்த சிலம்புகளை அணிந்த செல்வத்திருமகனான பலராமனே! நீயும், உன் தம்பியும் உறக்கத்தில் இருந்து எழுந்து எங்களுக்கு தரிசனம் தர வேண்டும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.