Type Here to Get Search Results !

குழந்தைக்கு என்ன பெயர் சூட்டலாம் ?

             பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற நம் வாழ்வில் கிடைக்கும் பதினாறு பேறுகளில் நன் மக்கட்பேறே மிகச் சிறப்பானதாகும். அறிவிற்சிறந்த, நற்பண்புடன் கூடிய பிள்ளைகளைப் பெறுவது என்பது மாபெரும் வரம் அல்லவா? அப்படி, தவமாக தவமிருந்து பெற்றெடுக்கும் குழந்தைச் செல்வம் என்பது எத்தகைய பாக்கியமோ, அதேபோன்று அந்த குழந்தைக்கு   நல்லதொரு பெயர் அமைவதும் பெரும் கொடுப்பினை ஆகும்.


குழந்தை பிறந்தவுடன், எந்தப் பெயர் வைத்தால் அக்குழந்தையின் வருங்காலம் சிறப்பாக, அதிர்ஷ்டமானதாக அமையும் என்று ஆய்வு செய்வதும், சிறப்பான பெயர் அமையவேண்டும் என்பதும் பெற்றோர்களின் விருப்பமாக இருக்கும். அதைப் பூர்த்தி செய்யவே இந்த கட்டுரை.
ஜென்ம நட்சத்திரப்படி பெயர் சூட்டுவது, நட்சத்திர நாம எழுத்துப்படி பெயர் வைப்பது, நியூமராலஜிப்படி பெயர் வைப்பது என பல வழிகள் உண்டு. குழந்தை பிறந்த நட்சத்திரப்படி பெயர் வைப்பதே தொன்றுதொட்டு இருந்துவரும் மரபாகும். 
12 ராசிகள், 27 நட்சத்திரங்கள். ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் நான்கு ‘நாம நட்சத்திர’ எழுத்துக்கள் உண்டு. அதன்படி பெயர்  அமைப்பது  விசேஷமாகும்.
பஞ்சாங்கத்தில் நாம நட்சத்திர எழுத்து என்று இருக்கும். அதில் ஒருவர் பிறந்த நட்சத்திரத்துக்கு நான்கு எழுத்துக்கள்  தரப்பட்டிருக்கும். அந்த எழுத்தில் ஒன்றை பெயரின் முதல் எழுத்தாக வைத்துக்கொள்ளலாம். 


குறிப்பாக, ஒருவரது பிறந்த நட்சத்திரம் அசுவினி என்று எடுத்துக் கொள்வோம். ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் நான்கு பாதங்கள் உண்டு. அசுவினியைப் பொறுத்தவரையிலும் முதல் பாதத்துக்கு ‘சு’ என்ற எழுத்தும், 2-ஆம் பாதத்துக்கு ‘சே’ என்ற எழுத்தும், 3-ஆம் பாதத்துக்கு ‘சோ’ என்ற எழுத்தும், 4-ம் பாதத்துக்கு, ‘லா’ என்ற எழுத்தும் நட்சத்திர எழுத்தாக வரும். அதன்படி, ஒருவர் அசுவினி 1-ஆம் பாதத்தில் ஜனித்தவர் என்றால், அவருடைய பெயரின் முதல் எழுத்து, ‘சு’ என்று ஆரம்பித்தால் சிறப்பாகும். இப்படி ஒவ்வொரு நட்சத்திர பாதத்துக்கும் ஏற்றப்படி பெயர் முதல் எழுத்தை அமைத்துக் கொள்வது  விசேஷமாகும். 


அதேபோல், ஒருவர் தம் மூதாதையரின் பெயர்களையும் வைத்துக்கொள்ளலாம். மிகச் சிறந்த அறிஞர்கள், வாழ்வில் வளம் பெற்றவர்கள், முக்கியஸ்தர்களாக இருந்தவர்கள் ஆகியோரது பெயர்களையும் வைத்துக்கொள்ளலாம். 


அடுத்து, பிறந்த தேதியின் அடிப்படையில் பெயர் சூட்டுவது குறித்து அறிவோம். பிறந்த தேதியின் எண்ணே பிறவி எண் ஆகும். பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டி வரும் ஒற்றை எண்ணே ‘விதி  எண்’ ஆகும். பிறவி எண்ணும், விதி எண்ணும் விதிப்படியே நமக்கு அமையும். அவற்றை நாம் தேடிப் பெற முடியாது; மாற்றிக்கொள்ளவும் முடியாது. அவை இயற்கையாக, நம் முன்ஜன்ம புண்ணிய, பாவ கர்மாக்களைக் கொண்டு அமைவதாகும். பிறவி எண்ணுக்கும் விதி எண்ணுக்கும் பொருத்தமான எண்ணை நம் பெயர் எண்ணாக வைத்துக் கொண்டால்  அதிர்ஷ்டத்தைப் பெருக்கிக்கொள்ளலாம். அதாவது, பிறவி எண்ணுக்கும் விதி எண்ணுக்கும் பொருத்தமான நட்பு  எண்ணைப் பெயர் எண்ணாக அமைப்பார்கள்.
ஆஸ்ட்ரோ  நியூமராலஜிபடி-  ஜாதகத்தில் அக்குழந்தையின் பிறந்த தேதி, மாத, வருட, நேரத்தைப் பொறுத்து... ராசி, லக்னப்படி எந்தக் கிரகம் வலுவாக, யோக பாக்கியங்களைத் தரும் நிலையில் உள்ளது என்பதை ஆராய்ந்து, அந்தக் கிரகத்தின் எண்ணைப் பெயர் எண்ணாக அமைத்துக்கொள்வதும் அதற்கேற்ற பெயரை தேர்வு செய்வதும் சிறப்பு.
உதாரணமாக, பிறவி எண் 1-ஆகவும், விதி எண் 3-ஆகவும் உள்ள ஒருவருக்கு பெயர் எண் 1, 3, 9-ஆக அமைவது சிறப்பு. இந்த மூன்று எண்களில், எண் 1-க்கு உரிய சூரியன், 3-க்கு உரிய குரு, 9-க்கு உரிய செவ்வாய் ஆகிய கிரகங்களில் எந்தக் கிரகத்தால் ஜாதகருக்கு அதிர்ஷ்டம் உண்டாகும் என ஆராய்ந்து, அந்த கிரகத்துக்கு உரிய எண் பெயர் எண்ணாக வரும்படி  பெயரை  தேர்வு செய்வதால், வாழ்வில் சுபிட்சம் கூடும்; சுப பலன்கள் அதிகம் கிடைக்கும்.
ஆங்கில எழுத்துக்கள் இருபத்தாறுக்கும் உரிய எண்கள் இங்கே தரப்பட்டுள்ளன. 
A I J Q Y - 1. 
B, K, R - 2, 
C, G, L , S - 3. 
D, M, T - 4.  
E, H, N, X - 5.
U, V, W - 6. 
O, Z - 7, 
F, P - 8. 


இந்த எழுத்துக்களைக் கொண்டு ஒருவரது பெயர் எண்ணை அறியலாம். இந்த எண்கள் சீரோ முறைப்படி தரப்பட்டுள்ளன.
குழந்தையின் பெயர் இனிஷியலுடன் (தகப்பனார் பெயரின்  முதல் எழுத்து) சேர்த்துப் பார்க்கவேண்டும். அதாவது அசுவினி 1-ஆம் பாதத்தில் பிறந்த குழந்தைக்குப் பெயரின் முதல் எழுத்து ‘சு' என வருவது நாம நட்சத்திர  எழுத்தாகும். குழந்தையின் அப்பாவின் பெயர் பதர் எனக் கொள்வோம். குழந்தையின் பெயர் அதிபன் போஸ் என்றால்
P.A.ATHIBAN BOSS என்ற பெயர் வரும். 


P. A. A T H I B A N  B O S S


8 1  1 4 5 1 2 1 5  2 7 3 3 = 43 வரும்.  
பெயரின் கூட்டு ஒற்றை எண் 7 ஆகும். பெயரின் கூட்டு ஒற்றை எண் 2, 4, 7, 8-ஆக அமைவது கூடாது. பிறவி எண்: குழந்தை பிறந்த தேதி 30-12-2014 எனக் கொள்வோம். குழந்தை பிறந்த தேதி எண் 3. அதாவது  30-ன் ஒற்றை எண். இது, குருவுக்கு உரிய எண். விதி எண்: 4. இது ராகுவின் எண். 
பெயர் எண் 1, 3, 9-ஆக அமைவது சிறப்பு. சிலர், குலப் பெயரையும் சேர்த்துக்கொண்டு பெயர் அமைப்பார்கள். ஆகவே, அதற்குரிய எண்களையும் சேர்த்துக் கொண்டு பார்ப்பது நல்லது. 
அதேபோன்று சில பொதுவான விஷயங்களையும் கவனத்தில் கொள்ளவேண்டும். அதாவது, பெயரில் ash, thi என்று வராமல் இருப்பது சிறப்பாகும். பெயர் ‘A’ என்ற எழுத்தில் முடிவது விசேஷமாகும். 



ஜாதகப்படி எந்த எண்ணுக்கு அதிக பலம் உள்ளது என்பதை அறிந்து, அந்த எண்ணில் குழந்தையின் பெயர் அமைவது  விசேஷ மாகும். லக்னப்படி பார்ப்பதே நல்லது. 

பெயர் கூட்டு எண் 1=ஆக வருமானால் 37-ம் 46-ம் விசேஷமானவை. 


3-ஆக வருமானால் 21, 30, 66 விசேஷமானவை.


5-ஆக வருமானால் 23, 32, 41 அதிர்ஷ்டமானவை. 


6-ஆக வருமானால் 24, 33, 42 விசேஷமானவை. 


9-ஆக வருமானால் 27, 45, 54, சிறந்தவை. 


பொதுவாக பிறவி எண் (பிறந்த தேதி எண்ணின் ஒற்றை எண்), விதி எண் (பிறந்த தேதி, மாதம், வருடம் இவற்றின் கூட்டு ஒற்றை  எண்) பெயர் எண் இம்மூன்றும் ஒன்றுக்கொன்று நட்பாக இருப்பது விசேஷமாகும். அப்படி அமையப் பெற்றவர்கள் பெரும் தனவான் ஆவார்கள். சகல பாக்கியங்களும் அவர்களுக்குக் கிடைக்கும். முக்கியஸ்தர் ஆக முடியும்.
பிறவி எண், விதி எண், பெயர் எண்களுக்கு உரிய கிரகங்கள் ஜாதகத்திலும் சிறப்பான நிலையில் இருப்பார்களானால் இரட்டிப்பு நற்பலன்கள் உண்டாகும். 

இனி, 27 நட்சத்திரங்களுக்கும் உகந்த பெயர் முதல் எழுத்துக்கள் பற்றி தெரிந்துகொள்வோம்.
அசுவினி:  கேது நட்சத்திர அதிபதி ஆவார். இதில் பிறந்தவர்கள் சு, சே, சோ, லா ஆகிய எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்தை அமைத்துக்கொள்ளலாம்.
பரணி:  இதில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் நட்சத்திர அதிபதி ஆவார். லி, லூ, லே, லோ ஆகியவற்றில் ஒன்றை பெயரின் முதல் எழுத்தாக அமைத்துக்கொள்ளலாம்.
கிருத்திகை: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன் நட்சத்திர அதிபதி ஆவார். இதில் பிறந்தவர்கள் அ, இ, ஊ, ஏ ஆகியவற்றில் ஒன்றை முதலெழுத்தாக ஏற்கலாம்.
ரோகிணி: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் நட்சத்திர அதிபதி. ஒ, வ, வி, வூ ஆகிய எழுத்துகளில் ஒன்றை பெயரின் முதல் எழுத்தாக அமைத்துக்கொள்ளலாம்.
மிருகசீரிஷம்: இதில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் நட்சத்திர அதிபதி ஆவார். வே, வோ, கா, கி, ஆகிய எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்தை அமைத்துக்கொள்ளலாம்.
திருவாதிரை:  இதில் பிறந்தவர்களுக்கு நட்சத்திர அதிபதி ராகு. இவர்கள் கு, க, ஞா, சா ஆகிய எழுத்துகளில் ஒன்றை பெயரின் முதல் எழுத்தாக அமைத்துக்கொள்ளலாம்.
புனர்பூசம்:  இதில் பிறந்தவர்களுக்கு குரு நட்சத்திர அதிபதி. இதில் பிறந்தவர்கள் கே, கோ, ஹ, ஹி ஆகிய எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்தை அமைத்துக்கொள்ளலாம்.
பூசம்: இதில் பிறந்தவர்களுக்கு நட்சத்திர அதிபதி சனி. இவர்கள் ஹீ, ஹே, ஹோ, ட ஆகிய எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்தை அமைத்துக்கொள்ளலாம்.
ஆயில்யம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நட்சத்திர அதிபதி புதன். இதில் பிறந்தவர்கள் டி, டு, டே, டோ ஆகிய எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்தை அமைத்துக்கொள்ளலாம்.
மகம்:  இதில் பிறந்தவர்களுக்கு கேது நட்சத்திர அதிபதி ஆவார். இதில் பிறந்தவர்கள் ம, மி, மு, மே ஆகிய எழுத்துகளில் ஒன்றை பெயரின் முதல் எழுத்தாக அமைத்துக்கொள்ளலாம்
பூரம்:  இதில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன்  நட்சத்திர அதிபதி.இதில் பிறந்தவர்கள் மோ, ட, டி, டு ஆகிய எழுத்துகளில் ஒன்றை பெயரின் முதல் எழுத்தாக அமைத்துக்கொள்ளலாம்.
உத்திரம்: இதில் பிறந்தவர்களுக்கு சூரியன் நட்சத்திர அதிபதி ஆவார். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் டே, டோ, ப,பி ஆகிய எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்தை அமைத்துக்கொள்ளலாம்.
அஸ்தம்: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் நட்சத்திர அதிபதி ஆவார். இதில் பிறந்தவர்கள் பு, ஷ, ட ஆகிய எழுத்துகளில் ஒன்றை முதலெழுத்தாக ஏற்கலாம்.
சித்திரை: இதில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் நட்சத்திர அதிபதி ஆவார். இதில் பிறந்தவர்கள் பே, போ, ர, ரி ஆகிய எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்தை அமைத்துக்கொள்ளலாம்.
சுவாதி: இதில் பிறந்தவர்களுக்கு ராகு நட்சத்திர அதிபதி ஆவார். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரு, ரே, ரோ, தா ஆகிய எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்தை அமைத்துக்கொள்ளலாம்.
விசாகம்:  இதில் பிறந்தவர்களுக்கு குரு நட்சத்திர அதிபதி ஆவார். இதில் பிறந்தவர்கள் தீ, து, தே, தோ ஆகிய எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்தை அமைத்துக்கொள்ளலாம்.
அனுஷம்: இதில் பிறந்தவர்களுக்கு சனி நட்சத்திர அதிபதி ஆவார். இதில் பிறந்தவர்கள் ந, நி, நு, நே ஆகிய எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்தை அமைத்துக்கொள்ளலாம்.
கேட்டை: இதில் பிறந்தவர்களுக்கு புதன்  நட்சத்திர அதிபதி.  நோ, ய, யி, யு ஆகியவை உகந்தவை.
மூலம்: இதில் பிறந்தவர்களுக்கு கேது நட்சத்திர அதிபதி. யே, யோ, ப, பி ஆகியன உகந்த முதலெழுத்துக்கள்.
பூராடம்: இதில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் நட்சத்திர அதிபதி. பு, த, ப, ட ஆகியன உகந்த முதலெழுத்துக்கள்.
உத்திராடம்: இதில் பிறந்தவர்களுக்கு சூரியன் நட்சத்திர அதிபதி. பே, போ, ஜ, ஜி ஆகியன உகந்த முதலெழுத்துக்கள்.
திருவோணம்: இதில் பிறந்தவர்களுக்கு சந்திரன் நட்சத்திர அதிபதி.  கி, கு, கே, கோ ஆகியன உகந்த முதலெழுத்துக்கள்.
அவிட்டம்: இதில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் நட்சத்திர அதிபதி. க, கி, கு, கே ஆகியன உகந்த முதலெழுத்துக்கள்.
சதயம்: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ராகு  நட்சத்திர அதிபதி ஆவார். கோ, ஸ, ஸி, ஸு ஆகியன உகந்த முதலெழுத்துக்கள் ஆகும்.
பூரட்டாதி: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குரு  நட்சத்திர அதிபதி. ஸே, ஸோ, த, தி ஆகியன உகந்த முதலெழுத்துக்கள்.
உத்திரட்டாதி:  இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சனி நட்சத்திர அதிபதி. து,ஸ, ச, த ஆகியன உகந்த முதலெழுத்துக்கள்.
ரேவதி: இதில் பிறந்தவர்களுக்கு புதன் நட்சத்திர அதிபதி. தே, தோ, ச, சி ஆகியன உகந்த முதலெழுத்துக்கள் ஆகும்.

நட்சத்திர படி குழந்தை பெயர்கள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.