Type Here to Get Search Results !

தீபாவளியின் தோற்றம் !



வெளிச்சத்தின் அருமை இருட்டில் தான் தெரியும். இருட்டில் தடுமாறும்போது, எங்கிருந்தாவது ஒளிராதா என தவிக்கிறோம். மனம் கவலையில் மூழ்கி சோகத்தால் இருண்டிருக்கும். அப்போது தீப ஒளி என்னும் நல்வழி தோன்றாதா! அதன் நடுவே நாம் குதூகலத்துடன் இருக்கமாட்டோமா என எண்ணுகிறோம். இதே போன்ற சிக்கல் தீர்க்கதமஸ் என்ற முனிவருக்கும் ஏற்பட்டது. அவர் இருண்ட காட்டில் தனது மனைவி, மக்களுடன் வசித்தார். இருட்டினால் மட்டுமல்ல, துஷ்ட மிருகங்கள், விஷ ஜந்துக்கள், அரக்கர்களாலும் அவர்கள் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள். எனவே அந்த இடம் ஒளிமயமாக வேண்டும் என விஷ்ணுவை நினைத்து பிரார்த்தித்தார். ஒருமுறை சனாதன முனிவர் அங்கு வந்தார். அவரிடம் தீர்க்கதமஸ் சந்தேகம் ஒன்றை கேட்டார். மனிதன் துன்பமாகிய இருளிலிருந்து விடுபட விரதங்களை அனுஷ்டிக்கிறான். இந்த விரதங்களும் பட்டினி, உடலை வருத்தும் தவம், நேர்ச்சை ஆகியவையாகத் தான் உள்ளன. இவை மேலும் மனிதனை துன்பப்படுத்துகின்றன. மனமகிழ்ச்சிக்கு சுலபமான வழி ஏதும் இல்லையா? என கேட்டார். இதற்கு பதிலளித்த சனாதனர், தீவிர விரதங்களால் மட்டும் தான் ஒளிமயமான பரம்பொருளைக் காணமுடியும் என நமது வேதங்கள் வழி ஏதும் வகுக்கவில்லை. தீர்த்தமாடி, புத்தாடை உடுத்தி, இனிப்பு பண்டங்களை சாப்பிட்டு, ஏழை எளியோர்க்கும் கொடுத்து, தீபங்கள் ஏற்றி, மனம் மகிழ்ந்து கொண்டாடுவதாலும் நாம் துன்பமாகிய இருளிலிருந்து சுலபமாக விடுபடலாம் என போதித்தார்.

இந்த விரதத்தை எப்படி பின்பற்றுவது என்று தீர்க்கதமஸ் கேட்கவே, சனாதன முனிவர் மிகவும் விரிவாக விளக்கினார். துலா (ஐப்பசி) மாதம் தேய்பிறையில் திரயோதசி அன்று மகாபிரதோஷ பூஜை செய்து, யமதீபம் ஏற்ற வேண்டும். எமதர்ம ராஜாவை மனதால் பிரார்த்தனை செய்து, அகாலமரணம் சம்பவிக்காமல் காக்கும்படி பிரார்த்திக்க வேண்டும். மறுநாள் நரக சதுர்த்தசி அன்று, நரகத்திற்கு செல்லாமல் இருக்கவும், ஏற்கனவே நரகத்தில் துன்பப்படுபவர்கள் அங்கிருந்து விடுபடவும் கடவுளைப் பிரார்த்திக்க வேண்டும். எண்ணெய், அரப்புத்தூள், சந்தனம், குங்குமம், மலர்கள், தண்ணீர், புத்தாடை, இனிப்புப்பண்டங்கள், தீபம், இனிப்பு மருந்து, நெருப்புப்பொறி ஆகியவற்றிற்கு பூஜை செய்ய வேண்டும். எண்ணெயில் லட்சுமிதேவியும், அரப்புப்பொடியில் சரஸ்வதியும், சந்தனத்தில் பூமிதேவியும், குங்குமத்தில் கவுரியும், புஷ்பத்தில் மோகினிகளும், தண்ணீரில் கங்கையும், புத்தாடைகளில் மகாவிஷ்ணுவும், இனிப்பு மருந்தில் தன்வந்திரியும், இனிப்பு பண்டங்களில் அமிர்தமும், தீபத்தில் பரமாத்மாவும், நெருப்புப் பொறிகளில் ஜீவாத்மாவும் நமக்கு அருள்பாலிப்பார்கள். இவற்றிற்கு கற்பூர ஆரத்தி காட்டி வணங்கினால் அனைவரும் மனம் குளிர்ந்து ஆசி வழங்கி, நம் குடும்பத்தாரை இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துவருவார்கள் என்றார். இப்படித்தான் தீபாவளி திருநாள் தோன்றியது.

ஐப்பசியில் தீபாவளி கொண்டாடுவது ஏன்?:-

கங்கா ஸ்நானம் செய்ய நல்ல நேரம்: அதிகாலை 4.30 - 5.30மணி.

இரண்டு பேருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்பவர் (பிரச்னைக்கு தீர்வு சொல்பவர்) தராசு போல நடுநிலையாளராக இருக்க வேண்டும் என்று சொல்வதுண்டு. தராசுக்கு துலாக்கோல் என்று பெயர் உண்டு. தீபாவளி கொண்டாடப்படும் ஐப்பசிக்கு துலா மாதம் என்று பெயர். தராசு எப்படி நடுநிலையாக தன் முள்ளைக் காட்டி நிற்குமோ, அதுபோல தனக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்ற பேதம் இல்லாமல்,எவன் இருக்கிறானோ அவனே நீதிமான். அதனாலேயே நீதிமன்றங்களில், நீதியின் சின்னமாக தராசை வைத்திருக்கிறார்கள். தீபாவளி நன்னாள் நீதியை எடுத்துச்சொல்கிறது. பெற்ற மகன் என்றும் பாராமல், அநியாயம் செய்த நரகாசுரனை திருமாலும், சத்தியபாமாவும் இணைந்து அழித்தனர். இந்த நீதியும், மனஉறுதியும் அனைவரிடமும் ஏற்பட வேண்டும் என்பதே தீபாவளித் திருநாள் நமக்கு உணர்த்தும் பாடம்.

நரகாசுரனின் நிஜப்பெயர்: நரகாசுரனின் உண்மைப் பெயர் பவுமன். திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியை துளைத்து அசுரர்களை அழிக்கச்சென்ற போது, அவரின் ஸ்பரிசத்தால் பூமாதேவிக்குப் பிறந்தவன். அசுர வதத்தின் போது பிறந்தவன் என்பதால் அசுர சுபாவம் இவனுக்கு இயல்பாக அமைந்து விட்டது. நரன் என்றால் மனிதன். மனிதனாக இருந்தாலும், துர்க்குணங்கள் நிரம்பியவனாக இருந்ததால் நரகஅசுரன் எனப்பட்டான். அப்பெயரே நரகாசுரன் என்றானது.

                             

தீபாவளியின் பெருமை: ஆண்டு முழுவதும் பல பண்டிகைகள் வந்தாலும் தீபாவளிக்கு என்று தனிச்சிறப்பு ஒன்று உண்டு. அன்றைய தினம் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரும் எண்ணெய் நீராடி, புத்தாடை அணிந்து, தீபம் ஏற்றிக் கொண்டாடுவது அவசியம் என்று புராணமே கூறுவதுதான் அந்தச் சிறப்பு. தீர்க்கதமஸ் என்ற முனிவருக்கு, தீபாவளியை இப்படிக் கொண்டாட வேண்டியதன் அவசியம் என்ன? என்ற சந்தேகம் எழுந்தது. உடனே அவர், சிவபெருமானின் சீடரான சனாதன முனிவரிடம் சென்று கேட்டார். முனிவரே, புனிதமான எள்ளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயில் மகாலட்சுமி இருக்கிறாள். அரப்புப் பொடியில் சரஸ்வதி வாசம் செய்கிறாள். வாசனை நிறைந்த சந்தனத்தில் பூமா தேவியும்; மஞ்சள் கலந்த குங்குமத்தில் கவுரிதேவியும் நிறைந்திருக்கிறார்கள்.

தீபாவளி நாளில் நீர்நிலைகளில் கங்கையும், புத்தாடை, அணிமணிகளில் மகாவிஷ்ணுவும், தீபாவளி மருந்தில் தன்வந்திரியும் உறைகிறார்கள். இனிப்புப் பலகாரங்களில் அமிர்தம் நிறைகிறது. மலர்களில் யோகினிகள் வசிக்கிறார்கள். தீபத்தின் சுடரில் பரமாத்மாவும், பட்டாசுகளின் தீப்பொறியில் ஜீவாத்மாவும் தோன்றுகிறார்கள். எனவேதான் தீபாவளித் திருநாளில் எல்லா தெய்வங்களின் அருளையும் பெறும் விதமாக, எண்ணெய் தேய்த்து நீராடி, புத்தாடை அணிந்து, மலர்களால் இறைவனை அலங்கரித்து, தீபங்கள் ஏற்றிவைத்து வழிபட்டு, பலகாரங்களை நிவேதனம் செய்து உண்டு, பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடுகின்றனர். தீபாவளி கொண்டாட இயலாதபடி வறுமையில் உள்ளவருக்கு, அதனைக் கொண்டாட உதவுவது, கோடானகோடி தான பலன்களுக்கு ஈடானது..! என்று தீபாவளிப் பண்டிகையின் பெருமையினை எடுத்துரைத்தார் சனாதன முனிவர்.

எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்?:-

தீபாவளி நன்னாளில் எண்ணெய் தேய்த்துக் கொள்வதும், நல்ல நீரில் குளிப்பதும் அவசியம். குளிக்கும் நீர் சுத்தமாக இருக்க வேண்டும். அது வெந்நீராக இருப்பது அவசியம். எண்ணெய் தேய்த்துக் குளிப்பதில் தனிச்சிறப்பு இருக்கிறது. தீபாவளியன்று நம் வீட்டில் இருக்கும் எண்ணெயில் திருமகளாகிய மகாலட்சுமி வாசம் செய்கிறாள். சாதாரணமாக எண்ணெய் தலையைக் கண்டால் அபசகுனம் என சொல்வோம். ஆனால், தீபாவளி நாளில் எண்ணெயில் லட்சுமி இருப்பதால் செல்வச்செழிப்பு ஏற்படும்.

பட்டாசு வெடிப்பது ஏன்?:-

திபாவளியன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பட்டாசு வெடித்தும் மகிழ்கின்றனர். அன்றைய தினம் பட்டாசு வெடிக்க காரணம் என்ன தெரியுமா? நம்மிடம் உள்ள காமம், குரோதம், கோபம், மோகம், மாச்சரியங்கள் போன்ற தீய குணங்கள், இறைவனுடைய நாமங்களால் தூள் தூளாக வேண்டும். இதை குறிப்பதற்காகவே தீபாவளியன்று பட்டாசு வெடிக்கின்றோம்.

புத்தாடை அணிவது ஏன்?:-

நம் மனதில் இருக்கும் பேராசை, பொறாமை, கோபம் போன்ற அழுக்குகளைக் களைந்து, இந்த நாள் முதல் மனிதனாக, புதிய எண்ணங்களை நம் உள்ளத்தில் அணிந்து கொள்ள வேண்டும் என்ற உண்மையை உணர்ந்து கொள்ளும் விதமாகவே புத்தாடை அணிகிறோம்.

தீபாவளியன்று சுவையான உணவு உண்பது ஏன்?:-
தீபாவளியன்று சுவையான உணவு வகைகளை நாம் சாப்பிட்டு மகிழ்கிறோம். இதற்குக் கூட காரணம் இருக்கிறது. நமக்கு உணவு கிடைக்க காரணமாக இருப்பவள் அன்னை அன்னபூரணி. இவள் காசி விஸ்வநாதர் கோயிலில் குடிகொண்டிருக்கிறாள். காசியில் கங்கா ஸ்நானமும், விஸ்வநாதரின் தரிசனமும் எவ்வளவு முக்கியமோ,அதே அளவுக்கு அன்னபூரணி தரிசனமும் சிறப்புமிக்கது. ஆதிசங்கரர் காசி சென்று அன்னபூரணி மீது ஸ்தோத்திரம் பாடினார். கருணையின் பற்றுக்கோடான தாயே!அன்னபூரணியே!பிச்சைபோடு! எனக்கு உலக அன்னையான பார்வதியே அம்மா! பரமேஸ்வரனே அப்பா! உ லகமே வீடு!உலக உயிர்கள் அனைத்தும் சொந்தங்கள்!என்று குறிப்பிட்டுள்ளார்.நாம் ஒவ்வொருவரும் நலமாக உணவு பெற்று வாழவேண்டும் என்பதே சங்கரரின் நோக்கம் என்பதை இந்த ஸ்தோத்திரம் எடுத்துக் காட்டுகிறது.
அந்த அம்பிகையிடம் அன்னத்தை கேட்டுப் பெறுவதுடன், இன்னொன்றையும் அவர் வேண்டுகிறார். வெறும் உணவைத் தின்று உடலை வளர்ப்பதால் பயனில்லை. அவளின் அருளைப் பெற்று ஞானம் வளர்ப்பதே பிறவிப்பயன்.அதனால்,சங்கரர் அன்னபூரணியிடம் இறுதியாக,அன்னபூர்ண ஸதாபூர்ணே சங்கரப்ராண வல்லபே! ஞான வைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி சபார்வதி! என்று அன்னத்தோடு,ஞானவை ராக்கியத்தையும் பிச்சையிடும்படி வேண்டுகிறார். காசியில் அன்னபூரணி தீபாவளியன்று லட்டு சப்பரத்தில் பவனி வருவாள். இது நமக்கெல்லாம் இனிமையான வாழ்வு கிடைக்கவேண்டுமென அவள் ஆசைப்படுவதைக் குறிக்கிறது.இதனால் தான் நாம் ருசியான பதார்த்தங்களைச் சாப்பிடுகிறோம்.

தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்?:-
கல்விக்கு சரஸ்வதி பூஜை என்றால், செல்வத்திற்கு தீபாவளி எனும் லட்சுமி பூஜை. சரஸ்வதி பூஜை முடிந்து 20 வது நாள் தீபாவளி வருகிறது. வீட்டிற்கு வரும் லட்சுமியை வரவேற்கவே விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். செல்வத்திற்கு கடவுள் லட்சுமி. திருப்பாற்கடலில் அவதரித்தவள். விஷ்ணுவிற்கு மாலை அணிவித்து அவர் மார்பில் இடம் பிடித்தவள். இந்த நிகழ்ச்சிகள் நடந்த நாள் தான் தீபாவளி. எனவே தான் தீபாவளியன்று லட்சுமி பூஜை செய்கின்றனர்.

நெய் தீபங்கள்: தீபாவளி அன்று வீடுகளில் நெய் தீபங்கள் ஏற்றி வைக்க வேண்டும். இதனால் அகால மிருத்யு தோஷம் ஏற்படாதிருக்கும். சம்பந்தப்பட்டவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வர்.

அகல் விளக்கு தீபம்: அகல் விளக்கில் தீபம் ஏற்றினால், சக்தி தரும் என்பது ஐதிகம். அத்துடன் தீபசரஸ்வதி என்று 3 முறையும், தீப லட்சுமி என்று 3 முறையும், குல தெய்வத்தை நினைத்து 3 முறையும் ஆக மொத்தம் 9 முறை தீப்ததை நமஸ்காரம் செய்ய வேண்டும்.

தீபாவளி வழிபாடு செய்யும் முறை!:-
அதிகாலை கங்காஸ்நானம், படபடவென வெடித்துச் சிதறும் பட்டாசுகள், நாவில் உமிழ்நீர் ஊறவைக்கும் பலகாரங்கள், பட்சணங்கள் - இவை மட்டுமல்ல; செல்வம் பெருக்கும் லட்சுமி குபேர பூஜையும் தீபாவளியின் ஸ்பெஷல் அடையாளம்! இந்த பூஜை செய்வதால் நம் இல்லத்தில் சகல ஐஸ்வரியங்களும் பெருகும் என்பது ஐதீகம்.

பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் விரதம் இருந்து லட்சுமி குபேர பூஜை செய்யலாம். பூஜைக்கான ஏற்பாடுகளை தீபாவளிக்கு முந்தைய நாள் இரவே செய்து முடித்துவிடுவது நல்லது. தீபாவளி அன்று அதிகாலையிலேயே எழுந்து கங்கா ஸ்நானம் செய்த பிறகு, பூஜையறையில் லட்சுமி குபேரர் படம் மற்றும் குபேர யந்திரத்தை கிழக்கு அல்லது மேற்கு திசை பார்த்தபடி வைத்து, பூஜையறையையும் தெய்வத் திருவுருவங்களையும் மலர்களால் அலங்காரம் செய்யவேண்டும். லட்சுமி குபேரர் படத்துக்கு மஞ்சள், குங்குமம் இட வேண்டும். சுவாமி படத்துக்கு முன்பாக தலை வாழையிலை விரித்து, அதில் நவதானியங்களைத் தனித்தனியாகப் பரப்ப வேண்டும். நடுவில் சுத்தமான தண்ணீர் நிரம்பிய சொம்பை வைத்து, தண்ணீரில் சிறிது மஞ்சள் சேர்க்க வேண்டும். பிறகு, சொம்பின் வாயில் மாவிலைக் கொத்தைச் செருகி, அதன் நடுவில் ஒரு தேங்காயை மஞ்சள் பூசி, நிறுத்தின வாக்கில் வைக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் முதலான நிவேதனப் பொருட்களோடு, தட்சணையாக பணம் மற்றும் சில்லறை நாணயங்களையும் சேர்த்து, கலசத்துக்கு முன்பாக வைக்க வேண்டும்.

தொடர்ந்து, மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, வாழையிலையின் வலது பக்கமாக வைக்க வேண்டும். அவருக்குக் குங்குமம் இட்டு அலங்கரிக்க வேண்டும். அதன்பிறகு, முழுமுதற் கடவுள் விநாயகர் வழிபாட்டோடு பூஜையை ஆரம்பிக்க வேண்டும். பிள்ளையார் மந்திரம், அஷ்டோத்திரம் சொல்லி வழிபடலாம். விநாயகரை வழிபட்ட பிறகு, மகாலட்சுமியின் ஸ்தோத்திரப் பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும். ஆனைமுகனே போற்றி.. விநாயகா போற்றி... அஷ்டலட்சுமியே போற்றி... குபேர லட்சுமியே போற்றி.. தனலட்சுமியே போற்றி.. என, அருள் தரும் தெய்வப் போற்றிகளைச் சொல்லியும் வழிபடலாம். தொடர்ந்து, குபேர ஸ்துதியைச் சொல்லி வழிபட வேண்டும். ஸ்துதி தெரியாதவர்கள், குபேராய நமஹ... தனபதியே நமஹ.. என்று துதித்து, உதிரிப் பூக்களை கலசத்தின் மீது போட்டு அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை செய்து முடித்ததும் வாழைப்பழம், காய்ச்சிய பசும்பால், பாயாசம் ஆகியவற்றை லட்சுமி குபேரருக்கு நைவேத்யம் செய்து, கற்பூர தீபாராதனையோடு பூஜையை நிறைவு செய்யவேண்டும். தாம்பூலத்தில் வைத்திருந்த தட்சணையை ஏழை சுமங்கலிகளுக்கு கொடுப்பது சிறப்பு. தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜை செய்வதால், சங்கடங்கள், காரியத்தடைகள் நீங்கும்; கடன் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்; நம் இல்லத்தில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

குபேர பகவானுக்கு நாணய வழிபாடு!:-

தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜையோடு குபேர பகவானுக்கு நாணய வழிபாடு செய்வதும் மிகமிக விசேஷம்! குபேர பகவானுக்கு உகந்த எண் 5 என்பதால், ஒரு தட்டில் நம் கை நிறைய 5 ரூபாய் நாணயங்களைப் போட்டு, அதைத் தட்டில் இருந்து நம் இரு கைகளாலும் அள்ளி எடுப்பதும், மீண்டும் தட்டில் போடுவதுமாக இந்த வழிபாட்டைச் செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால், நாணயங்களில் இருந்து ஒலி எழும்பும். அப்போது, அளகாபுரி அரசே போற்றி... என்று துவங்கும் குபேர பகவானின் 108 போற்றிகளைச் சொல்லி வழிபட வேண்டும். 108 போற்றிகளையும் சொல்லி முடிக்கும் வரை தட்டில் உள்ள நாணயங்களை இரு கைகளால் அள்ளி எடுப்பதும், மீண்டும் தட்டிலேயே போடுவதுமாக இருக்க வேண்டும்.

தீபாவளி அன்று குபேர பகவானுக்காகச் செய்யப்படும் இந்த நாணய வழிபாடு, நிலையான செல்வத்தை நமக்கு அருளும் என்பது நம்பிக்கை. நாணய பூஜை செய்து முடித்ததும் பால் மற்றும் சர்க்கரை கலந்த சிவப்பு அவல் நைவேத்யம் செய்து, தீப தூபம் காட்டி பூஜையை நிறைவு செய்ய வேண்டும். தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை, பிற்பகல் 1 மணி முதல் 2 மணி வரை அல்லது இரவு 8 மணி முதல் 9 மணி வரை புதன் ஓரையில் இந்த வழிபாட்டைச் செய்வது சிறப்பு. தீபாவளி அன்று செல்வம் பெருக்கும் லட்சுமி குபேர வழிபாட்டை மேற்கொள்வதோடு, அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று வழிபடுவதும் சிறப்பு. குபேர பகவான் அரிதாகச் சில கோயில்களில் தனிச் சன்னதிகளில் எழுந்தருளியிருப்பார். சென்னை வண்டலூரில் இருந்து திருப்போரூர் செல்லும் சாலையில், வண்டலூரில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள ரத்னமங்கலத்தில் லட்சுமி குபேரருக்குத் தனிக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் தீபாவளி வெகு விசேஷம்!

அன்னபூர்ணா ஸ்தோத்திரம்!:-
அறியாமை இருளகற்றி பேரின்ப ஒளியேற்றும் உன்னதத் திருநாள் தீபாவளி. இந்த நன்னாள் முதற்கொண்டு வறுமையும் பசிப்பிணியும் விலகி, நம் இல்லமும் உள்ளமும் மகிழ்வுற.. அன்று அன்னபூரணியை மனதார வழிபட வேண்டும். இந்த தேவியின் அருளிருந்தால் நம் வீட்டில் அன்னத்துக்கு பஞ்சம் வராது. அன்னையின் அருளைப் பரிபூரணமாகப் பெற உதவும் அற்புதமான ஒரு ஸ்தோத்திரம் உண்டு.

நித்யானந்தகரீ வராபயகரீ ஸௌந்தர்யரத்னாகரீ
நிர்தூதாகிலகோரபாபநிகரீ ப்ரத்யக்ஷமாகேஸ்வரீ
ப்ராலேயாசலவம்ஸபாவகரீ காஸீபுராதீஸ்வரீ
பிக்ஷாம்தேஹி க்ருபாவலம்பனகரீ மாதான்னபூர்ணேஸ்வரீ

பொருள் : சாச்வதமான ஆனந்தத்தை உண்டுபண்ணுபவளும் வரத ஹஸ்தத்தையும் அபய ஹஸ்தத்தையும் உடையவளும், அழகுக் கடலாக இருப்பவளும் ஸகலமான பயத்தைத் தரும் பாபக் கூட்டங்களை நாசம் செய்பவளும், சாக்ஷாத் மகேஸ்வரியும், ஹிமாவானுடைய வம்சத்தைப் பரிசுத்தம் செய்பவளும், காசி நகரத்து நாயகியும் பக்தர்களுக்கு கிருபையாகிய ஊன்றுகோலைக் கொடுப்பவளுமான தாயே... அன்னபூரணியே... பிச்சையைக் கொடு.

ஜகத்குரு ஆதிசங்கரர் அருளிய அன்னபூரணா ஸ்தோத்திரத்தின் அற்புதமான பாடல் இது. தீபாவளி நாளில் மட்டுமல்ல, தினமும்கூட இந்த ஸ்தோத்திரத்தைப் பாடி அன்னபூரணியை வழிபடுவது, விசேஷ பலன்களைப் பெற்றுத் தரும். அனுதினமும் இந்த ஸ்தோத்திரத்தைப் படித்து...

அன்னபூர்ணே ஸதாபூர்ணே ஸங்கரப்ராணவல்லபே
ஞானவைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷாம்தேஹி ச பார்வதி...

அதாவது... அன்னம் நிறைந்தவளே, எப்போதும் பூர்ணமாக இருப்பவளே, சங்கரனுடைய பிராண நாயகியே, ஹே பார்வதியே... ஞானம், வைராக்கியம் இவை உண்டாவதற்காக பிச்சைக் கொடு என்று அன்னையைத் தியானித்து வழிபட, சங்கடங்கள் யாவும் நீங்கி சர்வ மங்கலங்களும் நம் வீட்டில் உண்டாகும்.

தீபாவளி எப்போது கொண்டாடப்பட்டது?:-
சோழர் காலம் வரையில் தீபாவளிப் பண்டிகை தமிழகத்தில் பெருமளவில் கொண்டாடப்படவில்லை. திருமலை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் முதன்முதலில் மதுரையில்தான் தீபாவளித் திருவிழா அறிமுகமானதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. கி.பி. 1117-ல் கிடைத்த சாளுக்ய திரிபுவன மன்னரின் கன்னடக் கல்வெட்டில் ஆண்டுதோறும் தீபாவளி நாளன்று சாத்யாயர் என்ற அறிஞர்களுக்கு மன்னன் பரிசு வழங்கி கவுரவித்த குறிப்பு உள்ளது. தீபாவளி பற்றிய முதல் குறிப்பு இதுதான். ஹர்ஷர், தமது நாகானந்தம் என்ற நாடக நூலில் தீபாவளியைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். புதுமணத் தம்பதியர்க்கு தீபாவளி நாளில் புத்தாடை வழங்கும் பழக்கம் அந்தக் காலத்தில் இருந்ததாகக் கூறியுள்ளார். மராத்திய நூலான லீலாவதியில் தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக்குளிக்கும் வழக்கத்தைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. இது கி.பி. 1250-ல் இயற்றப்பட்டது. சாணக்கியரின் அர்த்த சாஸ்திரத்தில் ஐப்பசி மாத அமாவாசை நாளில் கோயில்களிலும் வீடுகளிலும் தீபங்களை ஏற்றி வைத்து வழிபாடுகள் நடத்தியதாகவும், அந்த நாளே தீபாவளி என்றும் கூறப்பட்டுள்ளது.

தீபாவளி நம்பிக்கைகள்!:-
1. தீபாவளி நாளில்தான் திருப்பாற்கடலில் மகாலட்சுமி அவதரிததாள். அதனால் தீபாவளி அன்று லட்சுமி பூஜை செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது. அன்றைய தினம் மாலையில் வீடுகளில் நெய் கொண்டு தீபங்கள் ஏற்றி மகாலட்சுமியை வழிபட்டால் அவளது அருள் எளிதல் கிடைத்து செல்வச் செழிப்பு மேலோங்கும் என்கிறார்கள்.

2. வட மாநிலங்களில் சில பகுதிகளில் தீபாவளி அன்று ரங்கோலி எனப்படும் வண்ணக் கோலமிட்டு தங்கள் வீட்டு முற்றத்தை அலங்கரிக்கிறார்கள். மஞ்சள், சிவப்பு, காவி ஆகிய மூன்று நிறங்களை கொண்டதாக இந்த கோலம் அமைகிறது. இப்படி கோலம் இடுவதால் மகாலட்சுமி தங்கள் வீட்டில் குடியேறி வாசம் செய்வாள் என்று நம்புகிறார்கள்.

3. தீபாவளிக்கு மறுநாள் குஜராத் மக்கள் நிறைய உளுந்து வடைகளை செய்கிறார்கள். அவற்றை வயிறு முட்ட சாப்பிடுவார்கள் என்று பார்த்தால் அதுதான் நடப்பதில்லை. அந்த வடைகளை அந்திசாயும் மாலை வேளையில் நான்கு தெருக்கள் சந்திக்கும் இடத்தில் போட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் வந்து விடுகிறார்கள். இப்படி செய்வதால், குடும்பத்தில் நிலவும் சண்டை சச்சரவுகள், பில்லி, சூனியம், ஏவல் போன்றவை விலகும் என்று நம்புகிறார்கள் அவர்கள்.
4. தீபாவளி அன்று மாலையில் வீட்டின் பின்புறம் தீபம் ஏற்றுவது வழக்கம். இப்படி செய்வதால் எமதர்மனுக்கு திருப்தி ஏற்பட்டு விடும். அதனால் அந்த வீட்டில் யாருக்கும் அகால மரணம் ஏற்படாது. மேலும் யாருக்கும் நரக பயம் இல்லை என்கிறது பவிஷ்யோத்ர புராணம்.
யம தீபம் எதற்கு?: தீபாவளிப் பண்டிகைக்கு முன்பாக மஹாளய பட்சம் காலத்தில், நம் முன்னோரை நினைத்து வழிபாடுகள் செய்வோம். அப்போது பூமிக்கு வரும் நம் மூதாதையர் நமது வழிபாடுகளை ஏற்றுக்கொண்டு மனத்திருப்தியுடன் மேலுலகத்துக்கு திரும்பிச் செல்வது, தீபாவளி - அமாவாசையன்று தான். அப்போது அவர்களுக்கு இருட்டில் பாதை தெளிவாகத் தெரிய வேண்டும் என்பதற்காக, தீபாவளிக்கு முதல் நாள் இரவு யம தீபம் என்ற ஒரு விளக்கை ஏற்ற வேண்டும். பெரிய அகல் விளக்கில் ஒரு தீபம் ஏற்றி, வீட்டு மொட்டைமாடி, மேற்கூரைகள்.. என உயரமான இடத்தில் தெற்குநோக்கி வைக்க வேண்டும். அப்போது,
ஸ்ரீ யமாய நம: ஸ்ரீ யமாய தர்ம ராஜாய ம்ருத்யவே சாந்த காயச சித்ர குப்தாய வை நம ஓம் நம: என்ற மந்திரத்தைச் சொல்லி வழிபடுவது சிறப்பு. இதனால் யமபயம் நீங்கும்.

தீபாவளி திருநாளின் பிற சிறப்புகள்!:-
மத்தியப் பிரதேசத்தில் குபேர பூஜை, ராஜஸ்தானில் வேடுவர் வீர விளையாட்டு, சவுராஷ்டிரத்தில் லட்சுமி பூஜை, மகாராஷ்டிரத்தில் தாம்பூலம் போடும் திருநாள், வங்காளத்தில் காளி பூஜை என்று ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வகையில் தீபாவளி கொண்டாடப்படுகிறது.

உத்தரபிரதேசம், பஞ்சாப் ஹரியானா மாநிலங்களில் ராமபிரான் வனவாசம் முடித்து, சீதையை ராவணனிடம் இருந்து மீட்டு அயோத்தி திரும்பிய நாளே தீபாவளி என்ற கதை கூறப்படுகிறது. தென்னிந்தியாவில் தீபாவளி முதல் குறிப்பு காணப்படுவது, சாளுக்ய திரிபுவன மன்னன் காலத்தில் எழுதப்பட்ட கன்னட கல்வெட்டில்தான். கி.பி. 1117ல் எழுதப்பட்ட இதில், ஆண்டுதோறும் சாஸ்திரங்களில் தேர்ச்சிபெற்ற அறிஞர்களுக்கு தீபாவளிநாளில் பரிசுகள் வழங்கப்பட்டதாக குறிப்பு உள்ளது.

குடந்தை சக்கரபாணி ஆலயத்தில் உள்ள கல்வெட்டில், தீபாவளி நாளில் பெருமாளுக்கு விசேஷ ஆராதனைகள் நடைபெற்ற விவரங்கள் காணப்படுகிறது.

ஹர்ஷர் தமது நாகானந்தம் எனும் நூலில் தீபாவளிக் கொண்டாட்டங்கள் பற்றியும் அன்றையதினம் புதுமணத் தம்பதிகளுக்குப் புத்தாடைகள் வழங்கப்பட்டதையும் குறிப்பிட்டுள்ளார். ஷாஜஹான், தீபாவளித் திருநாளில் சமபந்தி போஜனம் அளித்து, வாணவேடிக்கைகள் நிகழ்த்திக் கொண்டாடியதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.

தீபாவளி நாளன்று இமாசலத்தில் பசுக்களையும்; ஆந்திராவில் எருமைகளையும் நீராட்டி அலங்கரித்துக் கொண்டாடுகின்றனர். நேபாள நாட்டில் தீபாவளியை ஒட்டிக் கொண்டாடப்படும் விழாவின்போது, நாய்களுக்கு மாலை அணிவித்து திலகமிட்டு வழிபடுகின்றனர். வடமாநிலத்தின் சில பகுதிகளில் தீபாவளி சமயத்தில் பசுவின் சாணத்தினால் குடை போன்ற உருவங்கள் செய்து அவற்றுக்குப் பூப்போட்டு தீபமேற்றி வைத்து வழிபடுகின்றனர்.

எமதர்மராஜன், நசிகேதனுக்கு உயிர்ப் பிச்சை அளித்ததும் சாவித்திரிக்கு புத்திர வரம் தந்து சத்தியவானை உயிர்ப்பித்ததும் தீபாவளி நாளில் நிகழ்ந்ததாகக் கொண்டாடுகின்றனர் பஞ்சாப் மக்கள்.

பவிஷ்யோத்ர புராணம் தீபாவளி என்றும்; காமசூத்ரா கூராத்ரி எனவும்; கால விவேகம், ராஜமார்த்தாண்டவம் ஆகிய நூல்கள் சுபராத்ரி என்றும் சுக்ராத்ரி எனவும் தீபாவளியைக் குறிப்பிடுகின்றன. குலு பள்ளத்தாக்கில், தீபாவளி நாளன்று ராவணனுடைய உருவினை எரித்து, ராமபிரானின் வெற்றியைக் கொண்டாடுவது வழக்கமாக உள்ளது.

தீபாவளியன்று முக்தியடைந்த மகாவீரர்: கி.மு 540ல் சித்தார்த்தாவுக்கும், திரிசலை தேவியாருக்கும், வைசாலி அருகில் உள்ள குண்டக்கிராமத்தில் வர்த்தமான மகாவீரர் அவதரித்தார். அரசகுடும்பத்தில் பிறந்த வர்த்தமானர் யசோதை என்ற பெண்ணை மறந்தார். இவர்களுக்கு பிரியதர்சினி என்னும் மகள் பிறந்தாள். பெற்றோர் மறைவுக்குப்பிறகு வர்த்தமானர், தன் 30வது வயதில் துறவு மேற்கொண்டார். 12 ஆண்டுகள் ஆன்மிக தாகத்துடன் பல இடங்களுக்குச் சென்று பல மகான்களைச் சந்தித்தார். 43வது வயதில் நிர்வாணம் என்னும் ஞானநிலையை அடைந்தார். தான் பெற்ற ஞான அனுபவத்தை மக்களுக்கு போதனையாக எடுத்துரைத்தார். இவரைப் பின்பற்றிய மக்கள் ஜைனர்கள் எனப்பட்டனர். இவருடைய போதனையில் கொல்லாமை முதலிடம் பெற்றது. எல்லா உயிர்களையும் தன் உயிர்போல நேசிக்க வேண்டும் என்பதே இவருடைய கொள்கை. தன்னுடைய 72வது வயதில் பாவா என்னுமிடத்தில் மகாசமாதி அடைந்தார். தீபாவளியன்று இவர் முக்தி யடைந்ததாக தகவல் உண்டு. அன்பு, அகிம்சை, அறம், கொல்லாமை, எளிமை, தூய்மை, பற்றை விடுத்தல், உண்மை, நேர்மை, உயர்சிந்தனை போன்ற நற்பண்புகளின்
இருப்பிடமாக இவர் திகழ்ந்தார்.

குபேரனை வணங்கும் புத்தமதத்தினர்: தீபாவளிக்கு நாம் குபேர பூஜை செய்கிறோம். சீனா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் குபேரனை வணங்குகின்றனர். இந்நாடுகளில் இவர் சிரிக்கும் சிருஷ்டியாக (ஆனந்தம் தருபவர்) போற்றப்படுகிறார். குள்ளமான, கள்ளமில்லாத, சிரித்த முகமாக கனத்த தொப்பையும், கையில் கலசமும், பொன் மூட்டை, ஆபரணங்கள் என ஸ்வர்ண (தங்க) நிறமாக ஆராதிக்கின்றனர். மதங்கள் மாறுபட்டாலும் குபேர அம்சம் ஒன்றுதான். புத்தமதத்தில் குபேர வழிபாடு இருப்பதால், சீனர்களும் குபேர வழிபாடு செய்கின்றனர்.

சர்வமத பண்டிகை: தீபாவளியை இந்து மதத்தினர் மட்டுமல்ல, பவுத்த, ஜைன மதத்தினரும் கொண்டாடுகின்றனர். ஆசியாவிலேயே தீபாவளிதான் அதிகமான மக்கள் கொண்டாடும் பண்டிகை. ஐப்பசி மாதத்தில் வரும் அமாவாசை, திரயோதசி, சதுர்த்தசி, பிரதமை ஆகிய நான்கு நாட்களும் தீபாவளியோடு தொடர்பு கொண்டவை. வடமாநிலங்களில் அமாவாசை, பிரதமையிலும் தென் மாநிலங்களில் திரயோதசி, சதுர்த்தசியிலும் தீபாவளி கொண்டாடுகின்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.