Type Here to Get Search Results !

நாளை (21-ம் தேதி) காலை 4.30 மணிக்கு சொர்க்க (பரமபத) வாசல் திறக்கப்படுகிறது.

இந்தாண்டு வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, ரங்கம் அரங்கநாதர் மற்றும் ஆதிகேசவ பெருமாள்  திருவட்டார் உள்ளிட்ட பல்வேறு பெருமாள்  கோயில்களில் கடந்த 11-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை ‘பகல்பத்து’ எனப்படும் திருமொழித் திருநாள் உற்சவம் நடைபெற்றது. இராபத்து உற்சவம்  துவக்கமான வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, அனைத்து பெருமாள் கோயில்களிலும் நாளை (21-ம் தேதி) காலை 4.30 மணிக்கு சொர்க்க (பரமபத) வாசல்  திறக்கப்படுகிறது.

ஏகாதசி வரலாறு:

ஒரு காலத்தில் அம்பரீஷன் என்ற சக்கரவர்த்தி, ஏகாதசி விரதத்தை தவறாது கடைப்பிடித்தான். ஒருமுறை, ஏகாதசி முடிந்த மறுநாள் துவாதசியன்று,  யமுனை நதிக்கரையில் துர்வாச முனிவரை சந்தித்தான். அவருக்கு பாதபூஜை செய்து, அவரையும் தன்னோடு உணவு உண்ண வரும்படி அழைத்தான்.  யமுனையில் நீராடிவிட்டு வருவதாகச் சென்ற துர்வாச முனிவர் நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. அங்கிருந்த மற்ற ரிஷிகள், ‘அம்பரீஷா! துளசி  தீர்த்தத்தை அருந்தி விரதத்தை முடித்துக்கொள். துர்வாசரை விட்டு சாப்பிட்டால்தான் தவறு. தீர்த்தம் அருந்துவதில் தவறில்லை” என்று கூறினர்.
தன்னை எதிர்பார்க்காமல் அம்பரீஷன் மட்டும் துளசி தீர்த்தம் உண்டதைக் கேட்டு துர்வாசர் கோபம் கொண்டார். அம்பரீஷன் மீது சடைமுடி ஒன்றை  ஏவிவிட்டார். அது பூதமாக உருமாறி அம்பரீஷனைத் துரத்தியது இதை அறிந்ததும் பக்தனை காப்பதற்காக, அந்தப் பூதத்தின் மீது மகாவிஷ்ணு சுதர்சனச்  சக்கரத்தை எறிந்தார். அச்சக்கரம் பூதத்தையும் துர்வாசரையும் துரத்தியது. பாற்கடலுக்கு ஓடி, மகாவிஷ்ணுவிடம் தன்னை மன்னிக்குமாறு துர்வாசர்  வேண்டினார்.

‘துர்வாசரே! ஏகாதசி நாளில் என்னைக் குறித்து யாரொருவர் பக்தியோடு விரதம் இருக்கிறார்களோ, அவர்களுடைய இதயத்தில் நான் குடியிருக்கிறேன்.  அவர்களை காப்பது என் கடமை. அம்பரீஷனிடம் மன்னிப்பு கேளுங்கள். அப்போதுதான் சக்கரத்திடமிருந்து விடுதலை பெறுவீர்கள்’ என்றார் மகாவிஷ்ணு.
அம்பரீஷனிடம் தன்னை மன்னிக்குமாறு துர்வாசர் வேண்டியதோடு, அவனுக்குப் பல்வேறு வரங்களையும் தந்து அருளினார். ஏகாதசி விரதம் இருப்பவர்கள்  எவ்வளவு பெரிய துன்பத்தையும் தாங்கும் சக்தி படைத்தவர்களாகத் திகழ்வார்கள் என்பதற்கு இச்சம்பவம் ஒரு உதாரணம்.

விரத முறை:

ஏகாதசி விரதம் இருப்பவர்கள், அதற்கு முன்தினமான தசமி நாளில் ஒருவேளை மட்டும் சாப்பிட்டு, மறுநாள் ஏகாதசியன்று முழுமையாக உண்ணாவிரதம்  இருக்க வேண்டும். இரவில் கண்விழித்து பெருமாளின் பெருமையைப் பேசுவதும், விஷ்ணு சகஸ்ர நாமம், ரங்கநாதர் ஸ்துதி முதலியவற்றை ஓதுவதுமாக  இருக்க வேண்டும். ‘கண் விழிக்கிறோம்’ என்ற பெயரில் சினிமா, டிவி பார்க்கக்கூடாது. மறுநாள் துவாதசி அன்று காலை 21 வகை காய்கறிகளை சமைத்து  உண்ண வேண்டும். இதில் அகத்திக் கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் அவசியம் இடம்பெற வேண்டும்.

துவாதசியன்று காலையில் சாப்பிட்ட பிறகு பகலில் உறங்கக்கூடாது. விரதத்தின் போது எக்காரணம் கொண்டும் துளசி பறிக்கக்கூடாது. பூஜைக்கான  துளசியை முதல்நாளே பறித்து விடவேண்டும். ஏகாதசி விரதம் 10-வது திதியாகிய தசமி, 11-வதாகிய ஏகாதசி, 12-ம் திதியாகிய துவாதசி என்று 3 திதிகளிலும்  மேற்கொள்ளும் விரதமாக அமைந்துள்ளது. ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சகல சவுபாக்கியங்களையும் அடைவர். இவ்விரதத்தால் உடல்நலமும்  ஆரோக்கியத்துடன் திகழும். ‘வைகுண்ட ஏகாதசியன்று விரதம் இருப்பவர்கள், இறந்த பிறகு நேரே வைகுண்டம் செல்வார்கள். அவர்களுக்கு மறுபிறப்பே  இல்லை’ என்று பக்தர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

அனுஷ்டிப்பது எப்படி?

மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த ஏகாதசியை ‘வைகுண்ட ஏகாதசி’ உற்சவமாகக் கொண்டாட  திருமங்கையாழ்வார் ஏற்பாடு செய்தார். ஞானேந்திரியங்கள் ஐந்து, கர்மேந்திரியங்கள் (வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம்) ஐந்து, மனம் ஒன்று ஆகிய  பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தி தியானம் செய்வதே ஏகாதசி விரதம். உடலாலும் உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றியிருப்பதே  உபவாசம்.

இறந்தால் முக்தி கிடைத்துவிடுமா?

பாற்கடலில் மகாவிஷ்ணு வீற்றிருக்கும் வைகுண்ட வாசல், நல்லவர்களின் காலடி பட்டவுடன் தானே திறந்து கொள்ளும். ஏகாதசி திதியன்று மட்டும்  சொர்க்க வாசல் முழுமையாக திறந்திருக்கும். ஏகாதசி திதியன்று உயிர் துறப்பவர்களும்கூட அவரவர் பாவ, புண்ணிய பலன்களை அனுபவித்தே தீர  வேண்டும். வாழ்நாள் முழுவதும் இறைபக்தியுடனும், தர்ம சிந்தனையுடனும், இனிய குணத்துடனும் இருப்பவர்களே ஏகாதசியன்று மரணம் அடைவர்  என்பதால், இவர்கள் சொர்க்கத்துக்கு செல்வர்கள் என்பது  நம்பிக்கை.

தவிர்க்க வேண்டியவை:

ஏகாதசி திதி (முக்கியமாக வைகுண்ட ஏகாதசி) நாட்களில் தாய், தந்தைக்கு சிரார்த்தம் (நினைவு நாள்) வந்தால். அன்று செய்யாமல், மறுநாள் துவாதசி  திதியன்று நடத்த வேண்டும். அன்று கோயில்களில் தரப்படும் பிரசாதத்தைக்கூட சாப்பிடக்கூடாது (கூடுமானவரை கோயில் பிரசாதங்களை குழந்தைகள்,  நோயாளிகள், முதியவர்களுக்கு கொடுக்கலாம்). ஏகாதசியன்று உண்ணாமல் இருப்பவர்களை கேலி செய்து, அவர்களை உண்ண வைப்பவன் நரகத்திலும்  மிகக் கீழான நரகத்துக்கு செல்வான்.ஏகாதசி நாளில் துளசி இலைகளைப் பறிக்கக்கூடாது. தேவையான துளசிகளை முதல் நாளே பறித்து வைத்து விட  வேண்டும்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயில், ரங்கம் ரங்கநாதர் கோயில், திருவள்ளூர் வைத்திய வீரராகவ  பெருமாள் கோயில் உள்ளிட்ட 108 வைணவ திருத்தலங்களில் நாளை காலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. பெருமாள் ரத்னாங்கி  சேவையுடன் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். ஏகாதசி விரதம் இருந்து, சொர்க்க வாசல் வழியாக சென்று பெருமாளை சேவித்து, நம் துன்பம்  அனைத்தையும் களைவோம். பல்வேறு இறைபணிகளை மேற்கொண்டு, இறப்புக்கு பின் நேரே வைகுண்டத்தை அடைய வைகுந்த வாசனை வேண்டிக்  கொள்வோம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.